ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் இறங்கும் தங்க தமிழ்செல்வன்..!

சென்னை,

எதிர்பார்த்தது போலவே இந்த முறையும் திமுகவின் தங்க தமிழ்செல்வன், ஓபிஎஸ்ஸை எதிர்த்து போடியில் களம் காணுகிறார். இதையொட்டி பெருத்த எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டு வருகிறது. கடந்த எம்பி தேர்தலின்போதே, ஓபிஎஸ் மகனைத் தோற்கடிக்க பலவாறாக முயற்சி மேற்கொண்டார் தமிழ்செல்வன்.

அப்போதே தெரு தெருவாக ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்து கொண்டுள்ளார் என்று தங்க தமிழ்செல்வன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனாலும் மண்ணை கவ்விவிட்டார். தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் கோட்டைதான். திமுக இங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றதே கிடையாது..!!

அதிமுக இரண்டாக உடைந்தபோதுகூட, அமமுக செல்வாக்குடன் இருப்பதற்கு காரணமும் இதுதான். மற்றொரு பக்கம் சாதீய வாக்குகள் இரு கட்சிகளுக்குமே கை கொடுத்து வருகிறது. அதனால்தான் திமுகவில், தங்கதமிழ்செல்வன் தாவியபோதுகூட, தன்னுடைய ஆதரவாளர்களை அப்படியே திமுக பக்கம் இழுத்து செல்வார் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், ஓபிஎஸ் செல்வாக்கை இப்போது வரை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை என்பதே உண்மை. இப்போதுகூட திமுக சார்பில் ஒரு அசைன்மென்ட் தரப்பட்டது. அதில், முக்கிய தொகுதிகளுக்கு குறி வைக்கப்பட்டது. அதிலும் அதிமுக அமைச்சர்கள் உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனத்தை திமுக செலுத்தியது. அந்தந்த அமைச்சர்களுக்கு குறி வைத்ததுடன், அவர்களை இந்த முறை தோற்கடிக்கும் வியூகத்தையும் பலமாக வகுத்து வந்தது.

அப்போதுதான், தங்க தமிழ்செல்வனுக்கு வாய்ப்பு தரப்படும் என்றும் தகவல்கள் வந்தன. அதுமட்டுமல்ல, ஒருவேளை ஓபிஎஸ்ஸை நேருக்கு நேர் நின்று தோற்கடித்தால், நிச்சயம் அமைச்சர் பதவி தரப்படும் என்றும் ஒரு வாக்குறுதி தரப்பட்டதாக செய்திகள் கசிந்தன. அந்த வகையில், தங்க தமிழ்செல்வனுக்கு இன்று போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது திமுக. சமுதாய ஓட்டு, ஆதரவாளர்கள் ஓட்டு, அதிமுகவின் அதிருப்தி ஓட்டு, போன்றவைகள்தான் திமுகவுக்கு கை கொடுக்கும் என்று தெரிகிறது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, இங்குள்ள பல கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. போடிமதுரை இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டு தற்போது அது நிறைவடையும் நிலையில் இருந்தாலும் ரெயில் சேவை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராதது, மலை கிராம மக்களின் அடிப்படை வசதிகள் போன்றவை இன்னும் நிறைவேற்றப்படாத திட்டங்களாக இப்பகுதி மக்கள் சொல்கின்றன.

ஒருவேளை இதையெல்லாம் முன்வைத்து திமுக ஆட்சியில் நிறைவேற்றோம் என்று உறுதிமொழியுடன் தங்கதமிழ்செல்வன் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு சம்பந்தமான தென்மாவட்டங்களில் அதிருப்தி உள்ள நிலையில், இது ஓபிஎஸ்க்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது. எனினும், ஓபிஎஸ் தன் இரு மகன்களுடன் வலுவாக அங்கு உள்ள நிலையில், தங்கம் ஜெயிப்பரா? அமைச்சர் பதவியை பெறுவாரா? பார்ப்போம்..!

 

Translate »
error: Content is protected !!