கடைசி நேரத்தில் இப்படி பண்ணிட்டாங்களே.. அதிர்ச்சியில் சரத் குமார்…!

சென்னை,

நேற்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சிக்கு அதன் வேட்பாளர் ஒருவரே ஷாக் கொடுத்துள்ளார். சமக தலைவர் சரத் குமார் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு முக்கியமாக சம்பவம் ஒன்று நேற்று நடந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டது.

என்ன எங்களுக்கு இவ்வளவு இடமா? போட்டி போட ஆள் வேணாமா? என்று பதறிப்போன சமத்துவ மக்கள் கட்சி 37 இடங்களை எடுத்துக்கொண்டு 3 இடங்களை திருப்பி தந்துவிட்டது. 37ல் மட்டும் போட்டிபோடுகிறோம் என்று சமத்துவ மக்கள் கட்சி பெருந்தன்மையாக முடிவெடுத்தது. இந்த நிலையில் இதற்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு சமக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

நிலைமை இப்படி இருக்க நேற்று திடீர் என்று லால்குடி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளி கிருஷ்ணன் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். தலைமையிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் கடைசி நொடியில்.. நேற்று திடீர் என்று வேட்புமனுவை வாபஸ் வாங்கினார். இதனால் லால்குடி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தற்போது போட்டியிடவில்லை.

திடீர் என்று வேட்புமனுவை லால்குடியில் வாபஸ் வாங்கிய முரளி நேராக சென்று திமுகவில் இணைந்தார். நேற்று மாலையே திமுக நிர்வாகிகளை சந்தித்து கட்சியில் இணைவதாக அறிவித்தார். சில மணி நேரங்களில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேருவை சந்தித்து திமுகவில் முரளி இணைந்தார்., கட்சிக்காக தேர்தல் பணிகளை செய்வேன் என்றும் குறிப்பிட்டார்.

லால்குடி தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்ஏ சௌந்தரபாண்டியன் போட்டியிடுகிறார். இங்கு அதிமுக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில கட்சி சேர்ந்த தர்மராஜ் போட்டியிடுகிறார். இங்கு மக்கள் நீதி மய்யம் வாக்குகளை பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமக வேட்பாளர் இங்கு விலகியதால் தற்போது வாக்குகள் பெரிய அளவில் பிரிய வாய்ப்புகள் இல்லை.

வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் இவர் கட்சி மாறியதாக கூறபடுகிறது. திமுக சட்டமன்ற உறுப்பினரும் லால்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான சௌந்தரபாண்டியன்தான் சமக முரளியின் திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்று தகவல்கள் வருகின்றன. சமக முரளி இப்படி திடீரென திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தேர்தல் பணிகளை ஒருவாரமாக செய்து வந்த சமக உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!