ரஜினிகாந்திடம் இருந்து என்னை பிரிக்க சதி நடப்பதாக, ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சட்டை முன்வைத்துள்ளார்.
ஒருவழியாக அரசியலுக்கு வருவதை நேற்று அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், வரும் டிசம்பர் 31ஆம் தேதி கட்சி அறிவிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டார்.
பல ஆண்டுகளாக ரஜினிக்காக உருகிய, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் பலர் இருக்க, இன்று வந்த தமிழருவி மணியனுக்கு எடுத்த எடுப்பிலேயே பதவியா என்று, ரசிகர்கள் சிலர் மத்தியில் முணுமுணுப்பு எழுந்தது.
இந்த சூழலில், ரஜினிகாந்திடம் இருந்து என்னை பிரிக்க சதி நடப்பதாக, தமிழருவி மணியன் குற்றம்சாட்டியுள்ளார். ரஜினி முதல்வர் வேட்பாளராக இல்லையா என்பது குறித்து தான் எந்த தகவலையும் ஊடகம் வாயிலாக கூறிவில்லை; ஆனால் அவ்வாறு கூறியதாக செய்தி பரவுகிறது என்று, அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியின் ஆரம்பிக்காத கட்சிக்குள், அதற்குள்ளாகவே பிரிக்க சதி என்ற ரீதியில் தமிழருவி மணியன் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும் ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸில் இருந்த தமிழருவின் மணியன், காமராஜரின் மறைவுக்குப் பிறகு ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் லோக்சக்திக்கு தாவினார். அங்கும் சிறிதுகாலம் இருந்துவிட்டு, இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 2008ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து விலகி, 2009ம் ஆண்டில் காந்திய மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரஜினியை கடுமையாக விமர்சித்து வந்த தமிழருவி மணியன், ”தமிழகத்தின் ரட்சகராக ரஜினியை ஆராதிப்பவர்கள் அவரால் தமிழினம் பெற்ற நன்மைகளைக் கொஞ்சம் பட்டியலிட்டுச் சொன்னால் நல்லது” என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார். அதையெல்லாம் தற்போது சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தமிழருவி மணியனை “சூடேற்றி” வருகின்றனர்.