அமமுக பொருளாளர் வெற்றிவேலின் திடீர் மறைவால் உள்ளம் கலங்கித் தவிப்பதாக, டிடிவி தினகரன் உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமமுக பொருளாளராக இருந்து வந்த முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை காலமானார். இது, அமமுகவுக்கு மட்டுமின்றி, அதன் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.
அவரது மறைவு குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்த செய்தியை நம்பமுடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். ‘வெற்றி… வெற்றி’ என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெற்றிவேல் மறைவையொட்டி அமமுக கொடிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே, வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.