கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா மாற்றம்: அதிருப்தியில் மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மந்திரி மாதுசாமி, ஆனந்த்சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கடந்த 13-ந் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 பேர் புதிதாக மந்திரி பதவியை ஏற்றனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு புதிய மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டது. அத்துடன் 10 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதனால் மந்திரிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதையடுத்து மீண்டும் 6 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன.

அதில் மந்திரி மாதுசாமிக்கு மருத்துவ கல்வி, ஹஜ் மற்றும் வக்பு வாரியமும், ஆனந்த்சிங்கிற்கு சுற்றுலா, சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டது. மருத்துவ கல்வியை தன்னிடம் இருந்து பறித்ததால் சுதாகர் கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்தார்.

இதனால் மீண்டும் இலாகாக்களை மாற்றும் நிலைக்கு எடியூரப்பா தள்ளப்பட்டார். இந்த நிலையில் 3 மந்திரிகளின் இலாகாக்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மாதுசாமிக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வி பறிக்கப்பட்டு அது மீண்டும் சுதாகருக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்த்சிங்கிடம் இருந்த சுற்றுலா, சுற்றுச்சூழல் துறை மாதுசாமிக்கும், ஆனந்த்சிங்கிற்கு உள் கட்டமைப்பு மற்றும் ஹஜ்வக்பு வாரிய இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வித்துறை மீண்டும் தனக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் சுதாகர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அதே நேரத்தில் தங்களின் இலாகாக்களை பறித்ததால் மந்திரிகள் மாதுசாமி மற்றும் ஆனந்த்சிங் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மாதுசாமி தனது மந்திரி பதவியை இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதே போல் ஆனந்த்சிங்கும் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

 

Translate »
error: Content is protected !!