கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், வேப்பனப்பள்ளி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டோம். அந்த தொகுதிகளிலும் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதற்கு காரணம் யார் என உங்களுக்கே தெரியும். அவர்களின் உட்கட்சி பூசலால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
ஆனால் அவர்கள் இன்று ராஜ்யசபா எம்.பி. ஆகி விட்டார்கள். இந்த முறை நாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதே தொகுதிகளை பெற்று வெற்றி பெறுவோம். நாம் மக்களை நேரடியாக சந்திக்கிறோம். ஆனால் சிலரோ தோட்டத்திலே இருக்கிறார்கள். தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை. செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு எடுப்போம். நாம் இருக்கும் கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும்.
தொடந்து எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறுகையில், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான எங்களின் பணியை நாங்கள் தொடங்கி உள்ளோம். கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவை தொடர்பாக இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி தொடர்பாக எந்த கட்சியிலும் இதுவரை பேச்சுவார்த்தை நடந்ததாக தெரியவில்லை. பா.ம.க.வுடன் அ.தி.மு.க. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகவே பேச்சு வார்த்தையிலேயே பங்கேற்று வருகிறது என்று கூறினார்.