கூடுதலாக 15 நிமிடம் வேலை பார்த்தாலும் ஓவர் டைம் ஊதியம் வழங்கப்படும்…..மத்திய அரசின் புதிய திட்டம்

டெல்லி,

அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரத்தை விட, கூடுதலாக 15 நிமிடங்களுக்கும் மேலாக பணியாற்றினால், அதற்கான ஓவர் டைம் ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. நிறைய அலுவலகங்களில் குறிப்பிட்ட பணி நேரத்தை விடவும் கூடுதலாக தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிலை உள்ளது.

இதனால் அவர்களது, குடும்ப வாழ்க்கை, உடல் நலம், மன நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்பது தொழிலாளர் நலன் சார்ந்த அமைப்புகளில் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில்தான், மத்திய அரசு 2021-22ம் நிதியாண்டில் ஒரு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மாதம் இறுதியில் சட்ட வரைவு இறுதி வடிவம் பெற்று, வரும் நிதியாண்டு தொடக்கத்திலிருந்து அமல்படுத்தும் வகையில் அது நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக பிரபல முன்னணி ஆங்கில மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய சட்டத்தின்படி, அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். காண்ட்ராக்ட் நிறுவனங்கள் மூலமாக ஒரு நிறுவனத்தில் தொழிலாளி பணியமர்த்தப்பட்டு இருந்தாலும், அதை காரணம் காட்டி இந்த அடிப்படை உரிமைகளை மறுக்க கூடாது என்று அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இல்லை, காண்ட்ராக்டர் அல்லது மூன்றாவது நபர் மூலமாக பணிக்கு சேர்ந்த தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சட்டத்தின்படி, வேலை நேரத்தை விட கூடுதலாக அரை மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றும் போது ஓவர்டைம் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. இந்த சட்டம் ஏற்கனவே அமலில் இருந்தாலும் கூட பெரும்பாலான நிறுவனங்கள் இதை அமல்படுத்தவில்லை.

அப்படி இருக்கும் போது புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்படுவதால் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது. இந்த சட்டங்களை சரியாக கண்காணித்து நடைமுறைப்படுத்தினால் மட்டும்தான் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும், என்று தொழிலாளர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!