அரசியலில் நிரந்த நண்பரோ, எதிரியோ இல்லை; எங்களுடைய வியூகங்கள் மாறும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறினார். அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. கொரொனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.
தேர்தல் கூட்டணி வியூகம், வாக்குறுதி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஈடுபட்டுள்ளன. அதேபோல் காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பலன் தரக்கூடிய வகையில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேவைப்பட்டால் அணி மாறத் தயார் என்பதை சூசகமாக குறிப்பிட்டுள்ளது; அத்துடன் அதிமுகவுக்கு எதிராக அடக்கி வாசித்து வந்த நிலையில் தற்போது கடுமையான குற்றச்சாட்டுகளை பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்து வருகிறார்.
இந்த சூழலில், சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக விஜய பிரபாகரன் கருத்து தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.
மதுரை மாவட்டம் காளையார் கோயிலில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜயபிரபாகரன் கூறியதாவது: திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றுதான் தேமுதிக ஆரம்பிக்கப்பட்டது. காலத்தின் சூழ்நிலைகள் காரணமாக கூட்டணிகள் அமைக்கப்பட்டன.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை. கண்டிப்பாக எங்களுடைய வியூகங்கள் மாறும். கட்சியை எவ்வாறு பலப்படுத்த முடியுமோ அதனை நாங்கள் முடிவெடுப்போம்.
மூன்றாவது அணியை தேமுதிக நினைத்தால் கண்டிப்பாக உருவாக்க முடியும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அனைவருக்கும் அனுபவம் இருந்தாலும், தனித்துவமான தலைவராக யாரும் இன்னும் நிரூபிக்கவில்லை என்று விஜயபிரபாகரன் கூறினார்.
கடந்த 2006ம் ஆண்டு மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என ஆரம்பிக்கப்பட்ட 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
—