தமிழகத்தில் 2வது கொரோனா அலைக்கு வாய்ப்பே இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருச்சி,
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்றானது தமிழகத்தில் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு பொதுமக்கள் முதலில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நோயினால் பொதுமக்கள் இறப்பு விகிதம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. நான் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இன்று 2-வது கொரோனா தடுப்பூசி டோசை திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டேன்.
அது போல பணியாளர்கள் அரசு ஊழியர்கள் வருவாய்துறை ஊழியர்கள் உட்பட அனைவரும் போட்டுக்கொண்டுள்ளார்கள். தடுப்பூசியை பற்றி சிலர் வதந்தியை பரப்பி கொண்டிருக்கிறார்கள். அது இயல்பு தான். மேலும் கொரோனா தடுப்பு ஊசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவாக வரும். இரண்டு தடுப்பூசி மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவைகள்.
ஆகவே இதில் விவாதத்திற்கு இடமே இல்லை. மிகச்சிறப்பாக அரசு கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் பொதுமக்களும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்படுவது நல்லது.
இரண்டாவது அலை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதுவரைக்கும் தமிழகத்தில் 3 லட்சத்து ஐம்பதாயிரம் முன் களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்கள். ஆக கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் எப்போதும் அச்சப்படத் தேவையில்லை. அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, செவிலியர் ஜெயபாரதி, அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழரசி சுப்பையா, அன்பழகன், உட்பட பலர் உடனிருந்தனர்.