கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். விஞ்ஞானிகளின் அயராத உழைப்புக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்தது. இதில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் 3 நிறுவனங்களுக்கு, பிரதமர் மோடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன்படி, முதலில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு சென்ற பிரதமர், ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனையின் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்ததோடு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.
பாதுகாப்பு கவச உடை உபகரணங்கள், முகக்கவசம் அணிந்து நிறுவனத்துக்குள் சென்ற பிரதமர் மோடி, கொரோனோ தடுப்பு மருந்துப் பணிகளை நேரில் ஆய்வுசெய்தார். அவர்களிடம் பிரதமர் மோடியும் பல்வேறு சந்தேதகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஐதராபாத் சென்ற பிரதமர் மோடி, பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்படும் உள்நாட்டு தடுப்பூசி குறித்து பார்வையிட்டார். விஞ்ஞானிகளின் முயற்சி முழு வெற்றியடைய வேண்டுமென்று பிரதமர் வாழ்த்தினார்.