கோவிலுக்கு வேல் யாத்திரை செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன்? பாஜகவுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

வேல் யாத்திரைக்கு கோவிலுக்கு செல்லாமல் மாநிலம் முழுவதும் செல்வது ஏன் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டது.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை மனதில் வைத்துக் கொண்டு தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை நடக்கும் என்று அதன் தலைவர் முருகன் அறிவித்தார்.

ஆனால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து, பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுதாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, பாஜக தொடர்ந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன், இவ்வழக்கு தொடர்பாக நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

பாஜகவின் வேல் யாத்திரைக்கு சென்றவர்களில் மாஸ்க் போடாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை? கோவிலுக்கு மட்டும் செல்லாமல் மாநிலம் முழுவதும் பாஜக ஊர்வலம் செல்வது ஏன்? முருகன் கோயில் இல்லாத பகுதிகளுக்கு ஏன் யாத்திரை செல்கிறீர்கள்? பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வாவது வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது.

பொது அமைதி தொடர்புடையது என்பதால் யாத்திரை வழியை பாஜக தீர்மானிக்க முடியாது என்ற நீதிபதிகள், வேல் யாத்திரை நிறைவு செய்யப்படும் டிசம்பர் 6ம் தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள் என்று கண்டனத்தை தெரிவித்தனர்.

பாஜக தொடர்ந்த வழக்கில் அவசர வழக்கில் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Translate »
error: Content is protected !!