சேலம்,
13 சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்த சங்ககிரி அ.தி.மு.க. வேட்பாளர் பின்னர் அடுத்த சுற்றுகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சங்ககிரி சட்டமன்ற தொகுதி
தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சுந்தரராஜன், தி.மு.க. சார்பில் ராஜேஷ், அ.ம.மு.க. சார்பில் செல்லமுத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் செங்கோடன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷோபனா என மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர்.
சங்ககிரி தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட மையத்தில் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் முதல் சுற்றில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ், அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரராஜனை விட கூடுதலாக வாக்குகள் பெற்று வந்தார். 13-வது சுற்றின் முடிவு வெளியிடும் போது அவர் அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 1,173 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க. வேட்பாளரின் ஏறுமுகம்
அதைத்தொடர்ந்து 14-வது சுற்று எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.. அதுவரை இறங்கு முகத்தில் இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரராஜன் அந்த சுற்றில் தி.மு.க. வேட்பாளர் ராஜேசை விட கூடுதலாக 449 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். பின்னர் அடுத்த சுற்றில் இருந்து அவர் ஏறுமுகமானார்.
இறுதி சுற்று முடிவின் போது சுந்தரராஜன் 1 லட்சத்து 15 ஆயிரத்து 472 வாக்குகள் பெற்றார். இவர் தி.மு.க. வேட்பாளரை விட 20 ஆயிரத்து 45 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் ராஜேஷ் 95 ஆயிரத்து 427 வாக்குகள் பெற்றார்.
3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷோபனா 10 ஆயிரத்து 862 வாக்குகள் பெற்றார். மேலும் அ.ம.மு.க. வேட்பாளர் செல்லமுத்து 1,471 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோடன் 3 ஆயிரத்து 175 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
வாக்குகள் விவரம்
மொத்த வாக்குகள்– 2,74,234
பதிவானவை– 2,32,300
தள்ளுபடி-53
சுந்தரராஜன் (அ.தி.மு.க.)-1,15,472
ராஜேஷ் (தி.மு.க.)-95,427
ஷோபனா (நாம் தமிழர் கட்சி)-10,862
செங்கோடன் (மக்கள் நீதிமய்யம்)-3,175
செல்லமுத்து (அ.ம.மு.க.)-1,471
நோட்டா-1,469
(நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க. வேட்பாளர்கள் உள்பட 21 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.) தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரராஜனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வேடியப்பன் வழங்கினார். இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ராஜா 96 ஆயிரத்து 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.