சசிகலாவும் சீமானும் இணைய போகிறார்களா..! நல்ல பிளானா..! அதிமுக எப்படி சமாளிக்க போகுது.?

சென்னை,

இதோ நடந்தே விட்டது.. எது நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டதோ அது இப்போது நடக்க ஆரம்பித்து விட்டது. சசிகலாவை நேரில் போய் பார்த்து பேசி விட்டார் நாம் தமிழர் சீமான். இனி அதகளமான கூட்டணி வேலைகள் தொடங்கும் என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது வரை 2 அணிகள்தான் உறுதியாக உள்ளன. ஒன்று அதிமுக தலைமையிலான அணி, இன்னொன்று திமுக தலைமையிலான அணி. இந்த இரண்டு அணிகளுமே இன்னும் இறுதி ஆகவில்லை. காரணம் தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை.

இரு தரப்புமே மாறி மாறி கமுக்கமாக தங்களுக்குள் பேசிக் கொண்டுள்ளனர். ஆனால் எத்தனை பேருக்கு எத்தனை சீட், எந்தத் தொகுதி என்ற விவரம் இறுதியாகவில்லை. அதில் பெரிய அடிதடியே நடந்து கொண்டுள்ளது. இந்த நிலையில்தான் இந்த இரண்டு பேருடனும் சேராத சிலர் சேர்ந்த 3வது அணியை உருவாக்கும் யோசனையில் அலை பாய்ந்து கொண்டுள்ளனர்.

இது 3வது அணியாக இருக்குமா அல்லது மக்கள் நலக் கூட்டணி 2.0வாக இருக்குமா என்பது விவாதத்துக்குரியது. இந்த நிலையில்தான் அதிமுக விவகாரம் சசிகலா ஜெயிலில் இருக்கும்போதே சூடு பிடித்துக் காணப்பட்டது. அதிமுக உடைப் போகிறது. சசிகலா உடைக்கப் போகிறார் என்று ஒரு தகவலும், இல்லை இல்லை அதிமுகவில் சசிகலா இணைவார் என்று ஒரு தகவலும் உலா வந்தது. ஆனால் இரண்டுமே நடக்கவில்லை.

இந்த நிலையில்தான் இப்போது ரூட்டை மாற்ற ஆரம்பித்திருக்கிறார் சசிகலா. அதாவது தனது அரசியல் வேலைகளை அவர் தடபுடலாக தொடங்கி விட்டார். அவரது புதிய பாதை எப்படிப் போகப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் அவர் அமமுகவை வைத்து அதிமுகவை கைப்பற்றக் கூடும் என்ற பேச்சு இப்போது வலுத்து வருகிறது.

அதிமுகவுடன் இணைய முடியாத பட்சத்தில், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் அமமுக கரம் கோர்க்கப் போகிறது, அதுதொடர்பான பேச்சுக்கள் நடந்து வருவதாக நாம் முன்பே கூறியிருந்தோம். குறிப்பாக சீமானுடன், அமமுக கூட்டணி வைக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.

இப்போது சீமான் நேரில் வந்து சசிகலாவைப் பார்த்துள்ளதன் மூலம் இது உண்மையாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. அநேகமாக இப்படி ஒரு கூட்டணி அமையும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.. அதாவது அமமுக, நாம் தமிழர், தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, இன்னும் சில கட்சிகளை இணைத்து புதுக் கூட்டணி அமையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இதில் நாம் தமிழர் கட்சியும், அமமுகவும் குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துள்ள வலுவான கட்சி. எனவே இந்தக் கூட்டணி அமைந்தால் குறைந்தது 10 சதவீத வாக்குகளைக் கவர முடியும் என்று நம்பப்டுகிறது. அப்படி நடந்தால் நிச்சயம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை கூட ஏற்படலாம்.

இப்படி நடந்தால் அது யாருக்கு நன்மையோ தெரியாது.. ஆனால் நிச்சயம் பாஜகவுக்கு பெரிய லாபம்தான். காரணம் இப்படி ஒருநிலை வந்தால்தான் தனக்கு லாபம் என்று பாஜகவும் கருதுகிறது. எனவே இந்தக் கூடடணிக்கு அது மறைமுகமாக ஆதரவும் தெரிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஆனால் இப்படி ஒரு திட்டம் ஓடுவதை நிச்சயம் முதல்வர் எடப்பாடியார் உணராமல் இருக்க மாட்டார்.

எனவே அணை போட வேண்டிய இடத்தில் கரெக்டாக தடுப்பணையை போட்டு இந்த கூட்டணியை தடுக்க கண்டிப்பாக முயல்வார் என்று நம்புகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆக மொத்தம் சசிகலாவின் விஸ்வரூபம் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இது எந்த மாதிரியான போக்கில் இருக்கும் என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

Translate »
error: Content is protected !!