சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் திமுக… சென்னை, தஞ்சை மாவட்டங்களில் மாற்றம்!.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை மற்றும் தஞ்சை மாவட்ட திமுக பிரிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில், அடுத்தாண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவில், கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன.

கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருவள்ளூர், என பல்வேறு மாவட்டங்களில் இரண்டு அல்லது மூன்று தொகுதிகளை ஒரு மாவட்டக் கழகமாக பிரித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, தஞ்சை மாவட்ட திமுகவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை வடக்கு மாவட்ட திமுக நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் நடைபெற ஏதுவாக சென்னை வடக்கு – சென்னை வடகிழக்கு என 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மாதவரம், திருவொற்றியூர் அடங்கிய சென்னை வடகிழக்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக மாதவரம் சுதர்சனம் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்), பெரம்பூர், ராயபுரம் தொகுதிகள் அடங்கிய சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக தா.இளைய அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு மாவட்டம், சென்னை மேற்கு – சென்னை தென்மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகள் அடங்கிய சென்னை தென்மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக மயிலை. த.வேலு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு திமுக என இரண்டாக செயல்பட்டு வந்த நிலையில், தஞ்சை வடக்கு மாவட்டம், தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு மாவட்டம் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்பாளராக சு.கல்யாணசுந்தரம்; திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் அடங்கிய தஞ்சை மத்திய மாவட்டத்தின் பொறுப்பாளராக துரை.சந்திரசேகரன்; பட்டுக்கோட்டை, பேராவூரணி அடங்கிய தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏனாதி பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!