சாத்தூர் தொகுதியில் எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியிட மறுப்பு…. அதனால் அமமுகவில் இணைந்தார்..!

சென்னை, 

சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தற்போது டிடிவி தினகரன் கட்சிக்கு தாவியுள்ளார்.

ராஜேந்திரபாலாஜிக்கு மக்கள் சட்டசபைத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. நேற்றைய தினம் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக வெளியிட்டது. 177 தொகுதியில் அதிமுக போட்டியிடுகிறது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி சிட்டிங் எம்.எல். ராஜவர்மனுக்கு இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அமைச்சர் ராஜேந்திராபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பகிரங்கமாக வெடித்தது.

தன்னை கொன்று விடுவதாக ராஜேந்திரபாலாஜி மிரட்டுவதாக குற்றம் சாட்டியிருந்தார் ராஜவர்மன். இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் அதிருப்தியில் இருந்த ராஜவர்மன் இன்று டிடிவி தினகரன் கட்சியான அமமுகவில் இணைந்துள்ளார்.

சாத்தூர் தொகுதி எம்எல்ஏக்கக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது வென்ற எதிர்கோட்டை சுப்ரமணியன் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து காலியாக இருந்த தொகுதிக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. சாத்தூர் சடடசபைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.எல். ஆனவர் ராஜவர்மன். ராஜேந்திரபாலாஜியுடனான மோதலில் இந்தமுறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

டிடிவி தினகரன் கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், சட்டசபைத் தேர்தலில் ராஜேந்திரபாலாஜி தோல்வியை சந்திப்பார் என்று கூறினார். மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள் என்று கூறிய ராஜவர்மன், சிவகாசியில் அனைத்து சமுதாய மக்களிடமும் ராஜேந்திரபாலாஜியின் பெயர் கெட்டுப்போயுள்ளது என்றார். யாருமே ராஜேந்திரபாலாஜிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று பயந்துதான் ராஜபாளையம் தொகுதிக்கு மாறி விட்டார் ராஜேந்திரபாலாஜி என்றும் கூறியுள்ளார் ராஜவர்மன்.

Translate »
error: Content is protected !!