சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.
ஆஸ்திரேலியாவிற்கு சென்று ள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள், மூன்று 20 ஓவர் போட்டிகள், மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி , 375 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
கேப்டன் ஆரோன் பிஞ்ச், 124 பந்துகளில் 114 ரன்கள்; ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். க்ளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். டேவிட் வார்னர் 76 பந்துகளில் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
பிரம்மாண்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் நல்ல தொடக்கத்தை தர, முதல் ஐந்து ஓவர்களில் 53 ரன்களை இந்தியா எடுத்தது. மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த பின்னர் அவுட்டாகி திரும்பினார்.
அடுத்து வந்த கேப்டன் விராத் கோலியை, ஜோஷ் ஹேஸ்லூட் அவுட் ஆக்கினார். கோலி 21 பந்துகளில் 21 ரன்களுக்கு வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயரும் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா தடுமாறத் தொடங்கியது. நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல், 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும், பின்னர் வந்த ஹார்திக் பாண்டியா நம்பிக்கையை தந்தார். அவர், 90 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1,000 ரன்களை கடந்த இந்தியர் என்ற சிறப்பை அவர் பெற்றார். முடிவில், இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்து, 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
—