சென்னை,
தலைவிரித்தாடும் காங்கிரஸ் கட்சி பூசலால் திமுக கடுமையான அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் தேர்தல் பணிகளிலும் சுணக்கம் ஏற்படும் சூழலும் கவ்வி உள்ளது. பீகார் தேர்தல் ரிசல்ட் வந்தபோதே., பலரும் திமுகவை அலர்ட் செய்தனர்.
அந்த தேர்தலில், ஆரம்பத்தில் இருந்தே அதிக சீட்டுக்கள் வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியது. கேட்கும் சீட்டுக்கள் தராவிட்டால், தனித்து போட்டியிடுவோம் என்று மிரட்டலும் விடுத்தது.. முரண்டும் பிடித்தது. இதற்கு பிறகுதான் 70 சீட்டுகளை ராஷ்டிரிய ஜனதா தளத்திடம் இருந்து காங்கிரஸ் பெற்று,19 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. பீகார் என்றில்லை.
இங்கு நமக்கும் அப்படித்தான் நடந்தது.. 2016-ல் திமுகவிடம் 48 சீட் வாங்கி நின்று, கடைசியில் 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் ஜெயித்தது. அதாவது எங்கெல்லாம் காங்கிரஸ் அன்று நின்றதோ, அங்கெல்லாம் அதிமுகவின் வெற்றி உறுதியாகி விடுகிறது என்பதுதான் காங்கிரஸ் புகட்டி வரும் பாடம்.
அதனால்தான், இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே, திமுக தலைவர் படுஉஷாராக காய்களை நகர்த்தினார். தமிழகத்துக்கு ராகுலை கொண்டு வந்து காட்டி, சீட் பேரத்தை உயர்த்தியது காங்கிரஸ்.. இன்னொரு பக்கம் கமலுடன் மறைமுக பேச்சுவார்த்தையையும் நடத்தி வந்தது. வலுவிழந்து போய் காங்கிரஸ் இருப்பதே எல்லாவற்றிற்கும் காரணம்.
அதிமுக தலைமை, தேடி தேடி தைலாபுரத்துக்கு சென்று பேச்சு நடத்தியது என்றால், அதற்கு காரணம் பாமகவினர் கட்டமைப்புகளை பலமாக வைத்துள்ளதுதான்.. பாமகவை போல அப்படி ஒரு நிலைமையை காங்கிரஸ் தமிழகத்தில் ஏற்படுத்த தவறிவிட்டது.. காங்கிரசுக்கு நிறைய சீட் தராமல் திமுக புறக்கணிப்பதாகவும், இதற்கு பின்னணியில் பாஜகவே இருப்பதாகவும்கூட செய்திகள் பரபரத்தன. கிட்டத்தட்ட ஸ்டாலினின் இமேஜை இது டேமேஜ் செய்யும் அளவுக்கு சென்றது.
இதையும் திமுக தலைமை சமாளித்து, வேறு வழியில்லாமல் 25 சீட்கள் தந்தது.. ஆனால், ஏன்தான் 25 தொகுதிகள் கொடுத்தோமோ, தப்பு செய்துவிட்டோமே என்று ஸ்டாலின் வருத்தப்படும் நிலைமைக்கு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.. இப்போது, நமக்கு முதல் சந்தேகமே, ஒதுக்கப்பட்ட 25 சீட்களில் எல்லாம் காங்கிரஸ் ஜெயிக்குமா? என்பதுதான்.
அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்வதற்குள் பெரும் பூசலை சந்தித்துள்ளது காங்கிரஸ்… பல தொகுதிகளில் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுவதால் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா என்பதிலும் ஐயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, காரைக்குடியில் ப.சிதம்பரமே வாய் விட்டு வேதனைப்பட்டுள்ளார். சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் 3 கோஷ்டிகள் மாறி மாறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பும் ஏற்பட்டது.. 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்ய முடியாத இக்கட்டான சூழல் சூழ்ந்துள்ளது. பல மாவட்டங்களில் தொகுதிகள் தரவில்லை என்று கூறி காங்கிரஸார் கொந்தளித்து உள்ளனர்.
25 சீட் போராடி வாங்கியும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. அதிலும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கியமான குற்றச்சாட்டுகள் சத்தியமூர்த்தி பவனை நோக்க வீசப்பட்டு வருகின்றன.. இதனால், கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்களின் அதிருப்தி காரணமாக, தேர்தல் பணியில் தொய்வு ஏற்படும் நிலைமையும் வந்துள்ளது.
இந்த கோஷ்டி பூசல் இப்போது இல்லை. இந்திரா காந்தி காலத்தில் இருந்தே தமிழகத்தின் கோஷ்டி மோதலை தீர்க்க முடியவில்லை.. ராஜீவாலும் முடியவில்லை. சோனியாவாலும் முடியவில்லை.. சட்டை கிழிவதும், கட்டி உருளுவதும்தான், கோஷ்டி அரசியல் என்றாகிவிட்டது. இப்போதுகூட, சீட் கேட்கும் வரை ஒற்றுமையாக இருந்துவிட்டு, சீட்டு தந்ததும் காங்கிரஸார் இப்படி அடித்து கொண்டிருப்பது எல்லாரையுமே அதிர வைத்து வருகிறது. இதையெல்லாம் பார்த்துதான், 25 சீட் தந்து தப்பு செய்துட்டோமே என்ற முணுமுணுப்பு அறிவாலயத்தில் வேதனையுடன் ஒலிக்க துவங்கி உள்ளது..!