சீன ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராகவில்லை… பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாக தகவல் சீன ராணுவம், கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ள தயாராகவில்லை என்றும், பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் வேலையில் இறங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய-சீன ராணுவங்களிடையே 9ஆவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல் போக்கு – படை விலக்கம் பற்றி ஒரு பக்கம் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நெருக்கடியை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பாக சுமார் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தொடர்பாக சர்ச்சை நிலவும் பகுதிகளான, தவுலக் பெக்கால்டிக்கு கிழக்கே கிசில் ஜில்கா பகுதியில் மேலும் படைகள் குவிப்பு, காரகோரம் கணவாய்க்கு கிழக்கே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழிகள், பதுங்கு குழிகள் அமைப்பு என சீன ராணுவம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கு லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு நெடுக சீனா கண்காணிப்பு கருவிகளை பொருத்தியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிற்கு கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் டாங்குகள் உள்ளிட்ட கனரக போர்த்தளவாடங்களின் நகர்வு தென்படுவதாகக் கூறப்படுகிறது.
பாங்காங்சோ ஏரியின் வடகரையில் ஃபிங்கர் 4 பகுதியில் இருந்து ஃபிங்கர் 8 பகுதிக்கு சீன ராணுவம் பின்வாங்கிச் செல்லும் என கூறப்பட்ட நிலையில், ஃபிங்கர் 6 பகுதியில் இருந்து ஃபிங்கர் 8 பகுதி வரை அகலமான தார்சாலை அமைக்கும் பகுதியில் சீன ராணுவம் ஈடுபட்டுள்ளது.
அந்த உப்புநீர் ஏரியின் வடகரையில் மீண்டும் மோதல் ஏற்பட்டால் படைகளை விரைந்து குவிப்பதே சீனாவின் நோக்கம். இதேபோல கால்வன் பள்ளத்தாக்கு, தெப்சாங் சமவெளி மற்றும் பீடபூமிப் பகுதியில் உரசல் ஏற்பட்டுள்ள இடங்களில் வீரர்கள் தங்குமிடங்களையும் சீனா அமைத்துள்ளது.
ராணுவ நிலைகளை வலுப்படுத்துதல், படைகளை இடமாற்றுதல், ஆக்கிரமிப்பு அக்சய் சின் அருகே மோதல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற சீனாவின் நடவடிக்கைகள், 3,488 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் நீண்ட கால திட்டத்திற்கு அந்நாடு தயாராவதையே காட்டுவதாக பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
துருவப் பகுதி போல கடுங்குளிர் நிலவும் லடாக் எல்லையில் குளிர்காலம் முழுவதுமே படைகளை குவித்து, இந்திய ராணுவம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.