“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிடும் நிலையில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இந்த தேர்தலில் புதிதாக களம் இறங்கி உள்ளனர். இதனால் எப்போதும் இல்லாத வகையில் தேர்தல் களம் கடும் போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மதுரையில் தொடங்கிய கமல்ஹாசன் “தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்கிற கோஷத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார். தேர்தலில் நிச்சயம் 3-வது அணி அமையும்.
தேர்தல் நேரத்தில் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள கமல்ஹாசன் அதற்காக காத்திருக்காமல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதையடுத்து “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. மதுரையில் இருந்து பிரசார பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார். அன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடையும் கமல்ஹாசன் 3 கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
13-ந்தேதி மாலையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் கமல்ஹாசன் பின்னர் பெண்கள் அமைப்பினருடன் கலந்துரையாடுகிறார். இதன் பின்னர் தொழில் முனைவோருடனும் அவர் கலந்து ஆலோசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த 3 கூட்டங்களும் தனித்தனியாக உள்அரங்குகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் 14-ந்தேதி காலையில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் திறந்த வேனில் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். திண்டுக்கல், தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு திறந்த வேனிலேயே செல்லும் கமல்ஹாசன் குறிப்பிட்ட இடங்களில் தெருமுனைக்கூட்டங்களில் மக்கள் மத்தியில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15-ந்தேதி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இதே போன்று உள் அரங்க கூட்டங்களில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் அவர் ஆலோசனை நடத்துகிறார். இந்த மாவட்டங்களிலும் திறந்த வேனில் பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளன. கடைசி நாளான 16-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று திறந்த வேனில் சென்று மக்களை சந்திக்கும் கமல்ஹாசன் கடைசியாக மீனவர்களை சந்தித்து தனது முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகளை கமல் சந்திக்கிறார். கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்த பிறகு அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், தி.மு.க.வுக்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகிறார். தேர்தல் கூட்டணி பற்றி சமீபத்தில் பேட்டியளித்த அவர் கழகங்கள் இல்லாத கூட்டணியை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார். இதன் மூலம் தனது சுற்றுப்பயணத்தின்போது இரண்டு கட்சிகளுக்கும் எதிராக அனல் பறக்கும் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தே கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைதலைவர் மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள் அரங்க கூட்டங்களில் சுமார் 200 பேர் பங்கேற்கும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.