சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தரத்தீர்வு: முதல்வர் பழனிச்சாமி

மழைக்காலங்களில் தென்சென்னை, புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று, மழைநீர் தேங்கிய பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அண்மையில் கரைகடந்த நிவர் புயலால் சென்னையில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்தது.

இந்நிலையில், மழைநீர் இன்னும் வடியாத பள்ளிக்கரணை, ஒக்கியம் மடு, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பருவ காலங்களில் பெய்யும் கனமழையால் ஒவ்வொரு முறையும் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அப்பகுதிகளிலுள்ள தண்ணீரை வெளியேற்ற நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதற்காக நானே நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளேன்.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளையும் வரவழைத்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. செம்மஞ்சேரி பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்.

மேலும், வேளச்சேரி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் 4 கி.மீ. சுற்றி பள்ளிக்கரணை வருவதற்குப் பதிலாக, மத்தியப் பகுதியில் அமைகின்ற கால்வாய் மூலமாக நேராக இரண்டு கிலோ மீட்டரில் வருவதுபோல் ஏற்பாடு செய்து, தண்ணீர் தேங்காமல் எளிதாக வெளியேற நடவடிக்கை எடுப்படும்.

பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் வந்து சேர்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால், 3, 4 இடங்களில் கால்வாய்கள் அமைத்து தேங்கியுள்ள தண்ணீரைக் கொண்டு வரும்போது, தண்ணீர் தேங்காத ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசால் திட்டமிட்டுப்பட்டு வருகிறது.

இப்பணியின் அவசியம் கருதி மாநில நிதியிலிருந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 8 லட்சம் மக்கள், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!