திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்தித்து பேசினார்.
தமிழக சட்டசபைத் தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான பணிகளை தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.
காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, நேற்று தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சந்தித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேர்தல் தொடர்பாக இரு தலைவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிடவர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குண்டுராவ், ஸ்டாலின் உடனான சந்திப்பில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை என்றார்.