சென்னை,
ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தின் மேல் பகுதியில், அதிகவேக புயலையும் தாங்கும் திறன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரத்தியோகமாக இந்த கண்ணாடிகள் தயாரித்து எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
கடற்கரையை ஒட்டி இருப்பதால், கட்டடங்களின் பெயிண்ட் உப்புக்காற்றால் உரிவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பிரபல நிறுவனத்திடம் இருந்து அதிநவீன பெயிண்ட் கொள்முதல் செய்யப்பட்டு, அந்நிறுவன ஊழியர்களால் பீனிக்ஸ் கட்டடம், அறிவுசார் பூங்கா, அருங்காட்சியக கட்டிடத்திற்கு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனிம வளத் துறைக்கு சொந்தமான குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட முதல்தர கிரானைட் ஜெயலலிதா சமாதியில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கிரானைட் கல், லாரியில் மதுரை மேலூர் ஏற்றிச் செல்லப்பட்டு அங்கு, சமாதிக்கு தேவையான அளவில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பீனிக்ஸ் கட்டிடத்தின் நுழைவு பகுதியில் இரண்டு ஆண் சிங்கங்கள் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக்கலை நிறுவனத்திலிருந்து தயாரித்து எடுத்து வரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பூம்புகார் நிறுவனத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டு, ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் வெண்கல சிலைகளும், இருவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தை சுற்றிலும், அழகிய பூச்செடிகள், அழகிய இலைகளுடன் கூடிய மரங்கள், அலங்கார பனை உள்ளிட்டவை நடவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள தனியார் நர்சரியில், ஒரு ஆண்டுக்கு முன் ஆர்டர் கொடுக்கப்பட்டு, இவை எடுத்துவரப்பட்டு, சமீபத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செடிகள் கடற்கரை மணல் பரப்பில் எவ்வித பிரச்சினையுமின்றி வளர, புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து செம்மண் எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு, ஒவ்வொரு பணியையும் பார்த்து பார்த்து, ஜெயலலிதா நினைவிடத்தை பொதுப்பணித்துறையினர் செதுக்கியுள்ளனர். அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா அரசு செயல்படுத்திய திட்டங்கள், பொதுமக்களுக்கு விளக்கப்பட உள்ளது.
இங்கு மாணவர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் வழங்கிய சைக்கிள், லேப்டாப், தாலிக்கு தங்கம், மாடித்தோட்ட திட்டம் ஆகியவற்றின் செயல் விளக்கங்கள் இடம்பெற உள்ளது.
அருங்காட்சியகத்தில் ஜெயலலிதாவின் பல அரிய புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. இதுமட்டுமின்றி டிஜிட்டல் வடிவில் பல்வேறு வசதிகளும் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா தனது கம்பீரக் குரலில் பதில் அளிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
அருங்காட்சியத்தில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு பொதுமக்கள் மலர் தூவும் வசதியும் செய்யப்பட உள்ளது. கம்ப்யூட்டரில் உள்ள மல்லிகை, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பலவகை மலர்களை பொதுமக்கள் தேர்வு செய்து பொத்தானை அழுத்தினால் ஜெயலிதா படத்தில் அந்த மலர்கள் விழும்.
இதுமட்டுமன்றி அந்த பூவின் வாசனையும், அரங்கை நிரப்பும் வகையிலான நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா உள்கட்டமைப்பு பணிகளுக்கு மட்டும் 12.3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
இந்த நிதியில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் பிப்ரவரி 24–ல் ஜெயலிதா பிறந்த நாளில் அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் வரலாற்றுச் சின்னமாக மட்டுமன்றி வருங்கால பொறியாளர்களுக்கு பயிற்சிக் களமாகவும் இருக்கும். அந்த அளவிற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் இறுதிக்கட்டம் வரையிலான பணிகளை, வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பாக பொதுப்பணித்துறை தயாரித்து வருகின்றனர்.