ஜெயிலுக்குள் விவசாயம் செய்த சசிகலா…! அடிக்கடி போன் போட்டு பேசுகிறாராம்… ஒருநாள் வீட்டுக்கு வாங்க என்று அழைப்பு…!

சென்னை,

அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாக அறிவித்திருந்த சசிகலா பற்றின செய்திகள் ஒன்றிரண்டு தினந்தோறும் வெளிவந்தபடியே உள்ளன. அந்த வகையில் இப்போதும் காற்று வாக்கில் ஒரு செய்தி பறந்து வந்துள்ளது. சசிகலா ஜெயிலில் 4 வருஷம் இருந்துள்ளார்.

இந்த 4 வருஷத்தில் அவர் சிறைக்குள் பல பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார். இதை பற்றி அவ்வப்போது சில செய்திகளும் வெளியாகி கொண்டே இருக்கும். அந்த வகையில், ஜெயிலில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார் சசிகலா.

அதாவது 4 வருஷத்தில் அரை ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்துள்ளார். 1 டன் பப்பாளி விளைவித்துள்ளார். இதைதவிர, பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கைக்காய் உட்பட காய்கறிகளை விளைவித்ததாக தகவல்கள் வந்தன. அதற்கு பிறகு, ஜெயிலில் சசிகலா பாடம் படித்ததாக கூறப்பட்டது.

இதற்கு காரணம், நாளுக்கு நாள் சிறையில் மொழி தெரியாமல் அவதிப்பட்டார் சசிகலா. ஆரம்பத்தில் 4 வருடமும் கர்நாடக ஜெயிலுக்குள்ளேயே இருக்க போகிறோம் என்று சசிகலாவுக்கு தெரியாது. எப்படியோ கோர்ட்டில் வாதாடி சென்னைக்கு அழைத்து வந்துவிடக்கூடும் என்றுதான் கணக்கு போட்டிருந்தார்.

அது முடியாமல் போகவும், கன்னடம் மொழியும் தெரியாததால் நிறைய மொழி பிரச்சனை ஜெயிலுக்குள் ஏற்பட்டது. மிக முக்கியமான நேரங்களில் கூட, சிறை அதிகாரிகள், ஊழியர்களுடன் பேச முடியாமல் அவதிப்பட்டுள்ளார். வழக்கமாக, கல்வி கற்காத கைதிகளுக்கு, கல்வி கற்பிக்க ஜெயிலுக்கு ஆசிரியர்களே வருகை தருவார்கள்.

அப்படி வரும்போதுதான், அவர்களிடம் கன்னடம் எழுதுவது, படிப்பதை சசிகலா கற்றுகொண்டார். வெகு சீக்கிரத்தில் கன்னட மொழியிலும் தேறினார். 3-ம் வகுப்பும் பாஸ் பண்ணியிருக்கிறாராம். சசிகலா மட்டுமல்லாமல் இளவரசியும் கன்னடத்தில் பேசிவருகிறார் என்றும் செய்திகள் கசிந்தன.

இதற்கு பிறகுதான், சசிகலாவுக்கு கொரோனா தொற்று வரவும், ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனார். அந்த ஆஸ்பத்திரியில்கூட டிஸ்சார்ஜ் ஆகி செல்லும்போது டாக்டர்கள், நர்ஸ்களிடம் கன்னடத்திலேயே பேசினாராம். நன்றி சொன்னாராம்.

இவ்வளவு நல்லா கன்னடம் பேசுறீங்களேஎன்று டாக்டர்களே சசிகலாவிடம் ஆச்சரியப்பட்டு கூறினார்களாம். இப்போது விஷயம் என்னவென்றால், அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக அறிக்கை விட்டாலும், பழையதை சசிகலா மறக்கவே இல்லை.

ஜெயிலில் இருந்தபோது, தனக்கு எத்தனையோ உதவிகளை மனசார செய்த வார்டன்கள், ஊழியர்கள், மற்றும் கொரோனா பாதிப்பில் சிகிச்சை தந்தவர்கள் என அத்தனை பேருக்கும் அடிக்கடி போன் போட்டு பேசுகிறாராம். அதுவும் கன்னடத்துலயே பேசி அவர்களின் உடல்நலம் குறித்தும் விசாரிக்கிறாராம். சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வாங்க என்றும் அழைப்பு விடுக்கிறாராம். இந்த செய்திதான் தற்போது தீயாய் பரவி வருகிறது.!

 

Translate »
error: Content is protected !!