டாடா Vs மிஸ்திரி… ‘வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு!’ – தீர்ப்பும் பின்புலமும்

டாடா குழுமத்துக்கும், அதன் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் முக்கியமான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இந்தத் தீர்ப்பு டாடா குழுமத்துக்கு சாதகமாக இருக்கிறது. அதேவேளையில், ‘டாடா குழுமம் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்தும் கவனம் பெறுகிறது. பின்புலம் பார்ப்போம்.

டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் இருந்து ரத்தன் டாடா 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அப்போது அந்தப் பொறுப்புக்கு சைரஸ் மிஸ்திரி தலைவராக பொறுப்பேற்றார். (டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி குடும்பத்துக்கு 18.37 சதவீத பங்குகள் இருந்தன. இவர் 2006-ம் ஆண்டு முதல் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்தார்.)

பின்னர், டாடா குழுமத்துக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதிகரித்து வந்ததால், கடந்த 2016-ம் ஆண்டு டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, தன்னை நீக்கியது செல்லாது என தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயமான என்.சி.எல்.டி.-யில் சைரஸ் மிஸ்திரி வழக்கு தொடுத்தார். ஆனால், சைரஸ் மிஸ்திரிக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. மிஸ்திரியை டாடா குழுமம் நீக்கியது சரி என தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து என்.சி.எல்.டி. தீர்ப்பாயத்தில் சைரஸ் மிஸ்திரி மேல்முறையீடு செய்தார். இதில், சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமம் நீக்கியது சட்ட விரோதம் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டாடா குழுமம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இதில், சைரஸ் மிஸ்திரியை நீக்கியதில் எந்த தவறும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

அனைத்து பிரச்னைகளையும் சைரஸ் மிஸ்திரியே வரவழைத்திருக்கிறார்என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். முதலில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு முக்கியமான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டார். இதனைத் தொடர்ந்தே டாடா குழுமத்தின் இதர நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்தும் சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனால், அவர் நீக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தமக்கு கிடைக்கவில்லை என்பதற்காக சொந்த வீட்டை எரிக்கும் சூழ்நிலைக்கு இது ஒப்பானது. நிறுவனத்துக்கு எதிரான இந்த மனநிலையில் இருப்பவர்கள் முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலும் இருக்கக் கூடாதுஎனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல், டாடா குழுமம் சிறு முதலீட்டாளர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்னும் மிஸ்திரியின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ‘2012-ம் ஆண்டு மிஸ்திரி பொறுப்பேற்கும்போது டாடா குழுமத் தலைமையை பாராட்டி இருக்கிறார். ஆனால், 2016-ம் ஆண்டு நீக்கப்படும்போது எதிரான கருத்தை கூறுவதை ஏற்க முடியாது.

மேலும், 18 சதவீத பங்குகள் மட்டுமே உள்ள ஒருவர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குழுமத்தின் தலைவராக இருந்து, அனைத்து பொறுப்புகளை அனுபவித்த பிறகு, சிறு முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக டாடா செயல்படுகிறது என கூறுவதை ஏற்க முடியாதுஎன்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேலும், சைரஸ் மிஸ்திரியை தலைவராக நியமனம் செய்தது டாடா குழுமத்தின் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன். இதில் வெற்றி அல்லது தோல்வி என்பதை விட, என்மீதும் டாடா குழுமத்தின் நேர்மை மீதும் நடந்த தாக்குதல் மீதான வெற்றியாகவே பார்க்கிறேன்என டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்திருக்கிறார். ‘இனி, தொழில் வளர்ச்சி மற்றும் உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்த முடியும்என டாடா சன்ஸ் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத்தில் கிடைத்த வெற்றி காரணமாக பட்டியலிடப்பட்ட டாடா குழும பங்குகள் உயர்ந்தன.

டாடா குழுமத்துக்கு மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மிஸ்திரி குழுமத்துக்கு இருக்கும் வாய்ப்பு என்ன? தற்போது உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு கிடைத்திருப்பதால், இனி வேறு வழியில்லை. அதிகபட்சம் சீராய்வு மனு செய்யலாம். ஆனால், அதில் சாதகமான பதில் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்த சமயத்தில் மிஸ்திரி குழுமம் மற்றொரு கோரிக்கையையும் வைத்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் டாடா குழுமத்தில் இருக்கும் பங்குகளை விற்க இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், இரு தரப்புக்கும் இடையே பங்குகளை மதிப்பிடுவதில் விலை வித்தியாசம் இருந்தது. இந்த நிலையில், தீர்ப்பு எதிராக வந்தவுடன் வெளியேறும் வழி குறித்து மிஸ்திரி குழுமம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

ஆனால், ‘சட்டரீதியிலான விஷயங்களில் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். சந்தை மதிப்பு என்பது இரு தரப்புக்கும் இடையேயான விஷயம். இதர சட்ட வழிகளில் அந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும்என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

டாடா குழுமத்தில் 18.37 சதவீத பங்குகள் மிஸ்திரி குழுமத்துக்கு உள்ளன. இந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.1.8 லட்சம் கோடி என மிஸ்திரி குழுமம் கேட்கிறது. ஆனால், இந்தப் பங்குகளின் மதிப்பு ரூ.80,000 கோடி மட்டுமே என டாடா குழுமம் தெரிவித்திருக்கிறது. இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலை. தற்போது தீர்ப்பு வந்திருக்கும் சூழலில், டாடாவின் கை ஓங்கி இருக்கிறது.

அதனால், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த தொகையைவிட குறைவான தொகையில் கேட்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். மிஸ்திரி குழுமத்துக்கு சுமார் ரூ.23,000 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. இதனால், நிதி திரட்டும் பணியில் மிஸ்திரி குழுமம் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டுவந்தது.

இதில், டாடா சன்ஸ் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்தில் அடமானமாக வைத்து நிதி திரட்ட மிஸ்திரி குழுமம் திட்டமிட்டது. ஆனால், ‘எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் பங்குகளை அடமானம் வைக்க முடியாதுஎன டாடா குழுமம் இந்த நிதி திரட்டல் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆக, டாடா மற்றும் மிஸ்திரி குழுமத்துக்கு இடையே நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த வழக்கு மட்டும் முடிவுக்கு வரவில்லைஇரு குழுமங்களுக்கு இடையேயான 70 ஆண்டு கால நட்பும் முடிவுக்கு வந்ததிருக்கிறது.

Translate »
error: Content is protected !!