சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்படுள்ளது.
அதிமுகவில் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் தினகரன். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து அதிமுகவில் இருந்து தினகரன்ன் நீக்கப்பட்டார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார் தினகரன்.
அக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் தினகரன் இருந்து வருகிறார். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவுக்கு 23 மணிநேர வரவேற்பு கொடுத்து அமமுகவினர் அசத்தினர். இந்த நிலையில் அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று 10 இடங்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தினகரனை முதல்வராக்க பாடுபடுவோம் என அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அமமுகவின் முதல்வர் வேட்பாளர் தினகரன் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமமுக தலைமையில் கூட்டணி அமைப்பது தொடர்பான அதிகாரம், தினகரனுக்கு வழங்கியும் செயற்குழு, பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.