டெல்லி,
குடியரசுத் தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் குடியரசு தினத்தன்று மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து லட்சக் கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இந்த பேரணி ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. தாறுமாறாக டிராக்டர்களை ஓட்டியதாலும் தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்ததாலும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்த, பதிலுக்கு விவசாயிகளும் போலீசாரை தாக்கினர்.
இதனால் தலைநகர் டெல்லியே குடியரசு தினத்தன்று கலவர பூமியாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டிராக்டர் பேரணி குறித்து டுவிட்டரில் அவதூறு பரப்பியதாகவும் ஒரு சிலர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த நிலையில் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர், ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், டிராக்டர் பேரணி வன்முறை பற்றி கருத்து கூறியதாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டனர்.