புதுடெல்லி
புதுடெல்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி போலீசார் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டை மீறி உள் நுழைந்தது மட்டுமின்றி செங்கோட்டையை அவமதித்ததால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் வெளிநாட்டினருக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் இந்த பட்டியலை அனுப்பவும் காவல்துறை முடிவெடுத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் காவல்துறை இந்த நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 22 பேருக்கு விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.