டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
எனவே இது தொடர்பாக வருகிற 4-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 38-வது நாளை எட்டியது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள், டெல்லி எல்லைகளில் எந்த வித தொய்வும் இன்றி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தலைநகரில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினமான நேற்று 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது.
இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்தவெப்பநிலை ஆகும். இந்த கடுமையான குளிரிலும் இரவு–பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால் தங்கள் உடல்நலத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ள போதும் அவற்றை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை காசியாபாத்தில் உள்ள போராட்ட களத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அங்கு உள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது என்றும் தன்னை எல்லையிலேயே புதைக்குமாறு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விவசாயிகள் போராட்டதில் கலந்து கொண்டவர்களில் 40 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.