சென்னை,
நேரடியாக மத்தியில் ஆள்பவர்களை அட்டாக் செய்து ஆவேசமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். தேர்தல் நெருங்க நெருங்க கமல்ஹாசன் பிரச்சாரக் கூட்டங்களில் அவரது பேச்சில் அனல் தெறிப்பது அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. ஊர் ஊராக ஹெலிகாப்டரில் பறந்து சென்று பிரச்சாரம் செய்கிறார். குறைந்த நாட்களே இருப்பதால் வேறு வழியில்லை என்று அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
ஒரு பக்கம் இது போன்ற பிரச்சாரங்கள் என்றால் இன்னொரு பக்கம் அந்த கட்சியின் பலமான சோசியல் மீடியா ஆயுதத்தையும் கையில் எடுத்துள்ளார் கமல்ஹாசன். மிக அருமையாக திட்டமிட்டு ஒவ்வொரு பிரச்சினையையும் பேசும் வகையில் ஒரு வீடியோவை தயாரித்து அதை ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். காந்தி இப்போது உயிரோடு இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நினைக்கிறீர்களா.. வேலைவாய்ப்பின்மை , கொலை குற்றங்கள், விலைவாசி உயர்வு என அனைத்தும், காந்தி நினைத்ததற்கு எதிராக போகிறது.
உதவாது இனி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா! #நேர்மையின்_ஒளி_பரவட்டும் #TNElection2021 @maiamofficial https://t.co/cWW3K4xBcj pic.twitter.com/Bg7zHijCRL— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2021
பெட்ரோல் விலை எப்படி ஏறி உள்ளது தெரியுமா. அவர்களுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும் என்றால், டங் டனா டன் என்று விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இவரைப்போல தெருவில் இறங்கி சத்யாகிரகம் செய்யலாம் என்றால்.. ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. தேர்தலுக்காக போடப்பட்ட ஊழல் ரோடுகள்தான் அவை, என்று குரலில் ஏற்ற இறக்கத்தோடு கமல்ஹாசன் ஆவேசமாக கூறுகிறார்.
அத்தோடு கியரை மாற்றி டெல்லியை நோக்கி வாகனத்தை திருப்பியுள்ளார் கமல்ஹாசன். இதோ அவரது பேச்சின் அடுத்த அம்சம் இதுதான்.. ஊழல் தொலையுது விடுங்கள். அம்பேத்கர் கொடுத்த அரசியலமைப்பு சட்டம் நம்மை காப்பாற்றும். அந்த பலத்தில் நாம் வாழ்ந்து விடலாம் என்று நினைத்தால்.. மேலே இருந்து என்ன மொழி பேச வேண்டும்.. என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார். என்ன சிந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். இந்த தேசத்தை எப்படி நேசிக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுக்கிறார்.
“யோவ்.. உன்னோட ஊர் மேப்பில் மேலே இருக்கிறது என்பதால் அது தான் மேலிடம் என்று நினைத்து விடாதே.. நீ இங்கே இருந்து பார்.. இதுதான் தலைவாசல்..” இப்படி கோபமாக இங்கே இருந்து ஒரு ஆள் சென்று பேசுவார் என்று எதிர்பார்த்தால் அங்கே சென்று கையைக் கட்டிக் கொண்டு நிற்கிறார் இந்த ஆள். இதில் சைரன் வேறு.
இவர்கள் வாழ்க்கையில் ஒளிமயமாக இருக்கவேண்டும், ஆனால் நமது வாழ்க்கை.. என்று அவர் சொல்லும்போது திடீரென மின் விளக்கு அனைத்தும் அணிவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வர வேண்டும் என்றால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று கூறும் கமல்ஹாசன் தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை கையில் எடுக்கிறார். திரையை நோக்கி காட்டுகிறார்.
என்னடா இது ஒரு டார்ச்லைட் எப்படி வெளிச்சத்தை கொண்டு வரப் போகும் என்று பார்க்கிறீர்களா.
நான் தனி மரம் இல்லை தோப்பு என்று கமல்ஹாசன் தெரிவித்ததும், பின்னணியில் பல ஆயிரம் பேர் டார்ச் லைட் வெளிச்சத்தை பீய்ச்சி அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டு, மக்கள் நீதி மையம் கட்சியினர் நாளை நமதே என்று கோஷமிடுவது போல காட்சியமைப்பு உள்ளது. ஒரு புரட்சி திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற காட்சி அமைப்பில் அவை உள்ளன. உன்னால் முடியும் தம்பி திரைப்படத்தில் கமல்ஹாசன் பேசும் ஆவேசத்துடன் இருக்கிறது இந்த வீடியோ என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.
மத்திய அரசை கமல்ஹாசன் நேரடியாக விமர்சிப்பதில்லை என்று அவர் மீது பிற கட்சிகள் விமர்சனம் வைக்கும் நிலையில் நேரடியாக அவர் டெல்லியை நோக்கி குரல் எழுப்பி உள்ளார் என்று தான் இந்த வீடியோவில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எனவே தேர்தல் நெருங்க நெருங்க கமல்ஹாசன் தனது கியரை உச்சத்திற்கு மாற்றியபடி இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.