திமுகாவின் அதிரடி பிளான்!

சென்னை,

கனகச்சிதமாகவே திமுக காய் நகர்த்தி, தன் அரசியலை லாவகமாக செலுத்தி கொண்டிருக்கிறது என்பது ஒரு கருத்து கணிப்பு மூலம் மறுபடியும் நிரூபணமாகி உள்ளது.

புதுச்சேரியில் இந்த 5 வருஷமாகவே துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்தன.. இதன் விளைவு நாராயணசாமி ஆட்சியையே அதிகம் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டது..

காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் கோஷ்டிகள் உருவாகி உள்ளது.. இதனால், நடக்க போகும் தேர்தலில் நாராயணசாமிக்கு எதிராக வேலை நடக்கும் என்றும், சில முக்கிய பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்கம் வேலையும் நடப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.

இப்போதைக்கு கிரண்பேடி மாற்றப்பட்டு தமிழிசை கூடுதல் பொறுப்புக்கு வந்திருந்தாலும், திமுக வேறு மனநிலையில் அப்போதிருந்தே இருந்து வருகிறது.. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அந்த அதிருப்தி, திமுக பக்கமும் விழும் என்று புதுச்சேரி திமுகவினரே கடந்த மாதம் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அதுமட்டுமில்லை, இந்த 20 வருஷமாகவே புதுச்சேரியில் திமுக ஆட்சியில் இல்லை என்ற நிலைமை உள்ளதாலும், ஒரே நேரத்தில் 2 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் உள்ளது என்றும் ஸ்டாலின் தரப்புக்கு எடுத்துரைக்கப்பட்டது.. அதனால்தான், புதுச்சேரியில் தனித்து போட்டி, ஜெகத்ரட்சகன் முதல்வர் வேட்பாளர் என்ற பேச்செல்லாம் அடிபட்டது.

புதுச்சேரி வன்னியர்கள் நிறைந்த தொகுதி ஆகும்.. அந்த வகையில், ஜெகத்ரட்சகனை நிறுத்தவும் கணக்கு போடப்பட்டது.. இப்போது திமுக என்ன முடிவில் இருக்கிறது என்று வெளிப்படையாக தெரியவில்லை.. ஆனால், தங்கள் கட்சியின் பலத்தை அந்த மாநிலங்களில் வேரூன்றி உள்ளது..

இப்படிப்பட்ட சூழலில், நாம் நம் வாசகர்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தினோம்.. அதில், புதுச்சேரியில் யார் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.. பாமக என்ற ஆப்ஷனுக்கு 4.68 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. பாஜக என்ற ஆப்ஷனுக்கு 7.82 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. அதிமுக என்ற ஆப்ஷனுக்கு 7.16 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 27.05 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்..

வேறு யாராவது ஜெயிக்கட்டும் என்று 4.24 சதவீதம் பேரும், நோ கமெண்ட்ஸ் என்ற ஆப்ஷனுக்கு 4.31 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.. இதில் எதிர்பாராத விதமாக, திமுக என்ற ஆப்ஷனுக்கு 44.74 சதவீதம் வாசகர்கள் திரண்டு வந்து ஓட்டு போட்டுள்ளனர். இது ஒரு சுவாரஸ்யமான கருத்து கணிப்புதான்.. உறுதியானதும், இறுதியானதும் இல்லை என்றாலும், பல விஷயங்களை இதன்மூலம் அறிய முடிகிறது.

திமுக சரியான நிலைப்பாட்டையே சென்ற மாதம் எடுத்திருப்பதாகவே தெரிகிறது.. 20 வருடம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் இந்த அளவுக்கு ஒரு பெரும்பான்மை வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளதை, வரப்போகும் தேர்தலில் திமுக சரியாக பயன்படுத்தி கொண்டாலும் அது இன்னும் அந்த கட்சிக்கு சிறப்பையே தரும்.

அதேபோல, காங்கிரஸ் கட்சி தன்னுடைய பலவீனத்தையும் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.. ஏகப்பட்ட கோஷ்டி மோதல்களை மக்கள் ரசித்து கொண்டே இருப்பதில்லை.. மாறாக ஒரு சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டுவிடக்கூடும் என்ற அபாயத்தைதான், இந்த கணிப்பு உணர்த்துவதாக தெரிகிறது

இதில் பாமகவை குறிப்பிட்டு சொல்ல வேண்டி உள்ளது.. ஜெகத்ரட்சகனை முன்னிறுத்தி, திமுக வன்னிய ஓட்டுக்களை அள்ள பிளான் செய்திருந்தது.. ஆனால், உண்மையை சொல்ல போனால், பாமக தான் இதை செய்திருக்க வேண்டும்.. புதுச்சேரி வன்னிய ஓட்டுக்களை பெறுவதற்கான நடவடிக்கையில் என்றோ இறங்கியிருக்கலாம்..

ஜெகத்தை போலவே அன்புமணியையும் களமிறக்க தயாராகி இருக்கலாம்.. இப்போது பல கட்ட போராட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் பாமகவுக்கு, நிச்சயம் புதுச்சேரியில் வன்னியர் ஓட்டுக்கள் பெரும் பலனை பெற்று தந்திருக்க செய்யும்.

இறுதியாக, பாஜகவுக்கு இப்படி ஒரு சறுக்கல் தேவையா? என்றுதான் கேட்க தோன்றுகிறது.. 5 வருடம் படாதபாடு படுத்தி எடுத்துவிட்டார் கிரண்பேடி.. அதிகார மோதல் என்பது, ஆட்சியாளர்களைவிட, மக்களைதான் அதிகம் பாதிக்கிறது என்ற நிஜத்தையும் புதுச்சேரியின் இந்த 5 வருட நடைமுறை தெளிவுபடுத்தி உள்ளது..

இவ்வளவு காலம் காங்கிரசுடன் மோதல் இருக்கிறது என்று தெரிந்தும், அதை 5 வருடமாக சரி செய்யாமல், தேர்தல் சமயத்தில், கிரண்பேடியை திடீரென மாற்றி தன் வியூகத்தை கையில் எடுத்துள்ளது பாஜக.. ஆனால், மக்கள் அவ்வளவு சீக்கிரம் இந்த 5 வருடத்தை மறந்துவிட மாட்டார்கள்.

Translate »
error: Content is protected !!