“திராவக சோதனையில்” ஸ்டாலின் பாஸ்… 180 தொகுதிகளுக்கு மேல் நேரடியாக களம் களமிறங்கும் உதயசூரியன்

சென்னை,

திமுக தனது வியூகத்தில் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். கூட்டணி கட்சிகள் அனைவருக்கும்.. முடிந்த அளவுக்கு, குறைந்த தொகுதிகளை ஒதுக்கிதிராவக சோதனையில்பாஸ் செய்துவிட்டார் ஸ்டாலின்.

கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்குவதன் மூலமாக சுமார் 180 தொகுதிகளுக்கு மேல், உதயசூரியன் சின்னம் நேரடியாக களம் காண போகிறது என்பது அந்த கட்சிக்கு மிகப்பெரிய பலமாகும். கடந்த லோக்சபா கூட்டணியில் திமுகவுடன் இடம்பெற்றிருந்த அதையே கட்சிகளை, சட்டசபை தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைமை ரொம்பவே ஆசைப்பட்டது.

இதற்கு காரணம்.. லோக்சபா தேர்தலில் அந்த கூட்டணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. தேனி தவிர்த்த பிற அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதே நேரம், இது ஸ்டாலினுக்கு முக்கியமான தேர்தலே தவிர, தங்களுக்கு இல்லை என்று நினைத்து கூட்டணிக் கட்சிகள் தங்கள் பேர வலிமையை அதிகரித்தன. ஆனால் இதற்கு திமுக சம்மதிக்கவில்லை.

தனது பிடியில் உறுதியாக நின்றது. அதேநேரம் கூட்டணி உடையவும் அனுமதிக்கவில்லை. கண்ணாடியை கையாளுவதை போல ரொம்பவே ஜாக்கிரதையாக இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை கையாண்டது திமுக. காங்கிரஸ் 25, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 180 தொகுதிகளுக்கு மேல் திமுக நேரடியாக போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவையும், கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சியும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்கினாலும் கூட, திமுக மிக அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

கடந்த முறை சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கினார் ஜெயலலிதா. ஒரு வகையில் இந்த வியூகத்திற்கு வெற்றி கிடைத்தது. மறுபடியும் ஆட்சியில் அமர அது வாய்ப்பாக அமைந்துவிட்டது. ஆனால் திமுக காங்கிரசுக்கு மட்டும் 41 தொகுதிகளை கொடுத்தது.

ஆனால் அந்த கட்சி வென்றது வெறும், 8 தொகுதிகளில்தான். அந்த தப்பிலிருந்து இப்போது பாடம் கற்றுள்ளது திமுக. கிட்டத்தட்ட, ஜெயலலிதா பார்முலாவை கையில் எடுக்கிறது திமுக. தமிழகத்தை பொறுத்த அளவில், இரட்டை இலை அல்லது உதயசூரியன் ஆகிய இரு சின்னங்களும்தான் அனைத்து பகுதிகளிலும் பரிச்சயமானது.

தேர்தல் வாக்குப் பதிவின்போது சின்னம் முக்கிய பங்காற்றும். எனவேதான் எந்த அளவுக்கு அதிகமான தொகுதிகளில் தங்கள் சின்னம் போட்டியில் இருக்கிறதோ அந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் நினைக்கின்றன. அதிமுக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் இருப்பதால் அந்த கூட்டணியில் அதிக தொகுதிகளை அதிமுக விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது.

முறையே, 23 மற்றும் 20 தொகுதிகள் அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் தேமுதிகவும் இரட்டை இலக்கத்தில்தான் தொகுதிகளைப் பெறப்போகிறது. ஆனால், திமுக அணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் மட்டுமே இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுக்கும் 6 என்பதுதான் அதிகபட்சம்.

எனவே இந்த முறை உதயசூரியன் சின்னத்தை விட இரட்டை இலை சின்னம் குறைந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதுதான் எதார்த்தம். கூட்டணியையும் உடையாமல் பார்த்துக்கொண்டு, தங்களது சின்னத்தை அதிக இடத்தில் களம் இறக்கும் வியூகத்திலும் வெற்றி பெற்றுள்ளார் ஸ்டாலின். இந்த தேர்தலில் மிகப்பெரிய திராவக சோதனை என்று அழைக்கப்பட்டது கூட்டணி உடன்பாடுதான்.

அதில் கிட்டத்தட்ட முழு கிணறைத் தாண்டி விட்டார் ஸ்டாலின் என்பதால் திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர். அதிக தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுவதில் மற்றொரு அஜண்டா இருக்கிறது. ஒருவேளை குறுகிய இடைவெளியில் பெரும்பான்மையைப் பெற நேர்ந்தால் பாஜக இந்த கூட்டணியை உடைத்து விடுமோ என்ற அச்சமும் திமுக தலைமைக்கு இருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் இதற்கு முன்பு நடைபெற்ற கட்சி உடைப்பு சம்பவங்கள் மற்றும் சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவை இந்த பயத்துக்கு காரணம். இதை கூட்டணி கட்சிகளிடமும் தெளிவாக கூறியிருக்கின்றனர், திமுக பேச்சுவார்த்தை குழுவினர். எந்த அளவுக்கு அதிக பெரும்பான்மை பெறுகிறோமோ அந்த அளவுக்கு ஆட்சி காப்பாற்றப்படும் என்பதுதான் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட மெசேஜ். எனவே அவர்கள் இதற்கு சம்மதித்தார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

Translate »
error: Content is protected !!