தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் – அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை,

தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று (28–ந் தேதி) சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘‘சக்ஷம் 2021 துவக்க விழாவில் பேசியதாவது:–

‘‘சக்ஷம்” (சங்கரக்ஷன் ஷமதா மகோத்சவ்) என்பது இந்திய பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பும் எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து பெட்ரோலியப் பொருட்களை சிக்கனமான முறையில், செயல்திறனுடன் பயன்படுத்தி, எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையிலும்,

எண்ணெய் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16–ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15–ம் தேதி வரை மாபெரும் பரப்புரையை மேற்கொள்வதாகும்.

கடந்த 16.1.2021 அன்று புதுடெல்லியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் தருண் கபூர் ‘‘சக்ஷம் 2021 நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார். ‘‘சக்ஷம் 2021 க்கான கருப்பொருள், பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல்என்பதாகும்.

எரிபொருட்கள் பற்றி நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்தவும், எரிபொருட்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது குறித்தான ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதே ‘‘சக்ஷம் 2021 ன் நோக்கங்களாகும். இந்த ‘‘சக்ஷம் 2021 ஒரு மாத விழிப்புணர்வு பரப்புரையின் பிரச்சார இலக்குகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், மகளிர், வாகன ஓட்டிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.

கடந்த ஆண்டின் ‘‘சக்ஷம் 2020 விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மிகச்சிறந்த மாநிலத்திற்கான ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காக தமிழ்நாடு, வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக பாடுபட்ட, உழைத்த இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இவ்வாண்டும், ‘‘சக்ஷம் 2021 ஒரு மாத விழிப்புணர்வு பரப்புரையின் போது, ஓவிய போட்டிகள், பொறியியல் கல்லூரிகளில் கருத்தரங்குகள், குடியிருப்போர் சங்கங்களில் கட்டுரைப் போட்டிகள், வினாவிடை நிகழ்ச்சிகள், ஓட்டுனர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், சைக்கிள் பிரச்சாரம், விவசாயிகளிடையே பிரச்சாரம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மக்கள், கோள், செல்வச் செழிப்பு, அமைதி மற்றும் கூட்டமைப்பு என்ற 5 காரணிகளை முக்கிய கொள்கைகளாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளில் ஒன்றான பெறத்தக்க விலையிலான, நிலையான, தூய எரியாற்றலை அனைவருக்கும் வழங்குவதை உறுதி செய்தல்என்பதை நிறைவேற்றுவதற்கு

‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்என்ற அம்மாவின் கொள்கையின்படி, முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்வதோடு, ‘‘சக்ஷம் 2021 நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்விழாவில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன், தென் மண்டல அளவிலான எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அரூப் சின்ஷா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தென்மண்டல சில்லறை விற்பனை பிரிவு தலைவர் இந்திரஜித் சிங்,

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் தென் மண்டல தலைவர் சந்தீப் மகேஷ்வரி, கேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் மண்டல முதன்மை பொது மேலாளர் கே.அசோக், பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தென் மண்டல இணை இயக்குநர் ஆர்.கே.நேசமணி, இந்தியன் ஆயில் நிறுவன சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் அண்ணாதுரை மற்றும் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!