திருச்சியில் தனியார் அரங்கில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பழனிவேல் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு அழிவை ஏற்படுத்தும், மாநில கட்டுப்பாட்டில் உள்ள விவசாயத்தை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள், புரோக்கர்கள் என்றும் கூறுவது வருந்தத்தக்கது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாப்பை சேர்ந்தவர்களை கொச்சைப்படுத்துகிறது. இந்த கொச்சைப்படுத்துகிறது.
எனவே போராடும் விவசாயிகளை கொச்சைப் படுத்துவதை கண்டித்தும், விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி மற்றும் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் அதற்குள்ளாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கும்பட்சத்தில் டெல்லியில் 100 விவசாயிகள் சென்று தினம் ஒரு விவசாயி என தற்கொலை செய்யும் போராட்டத்தில் பங்கேற்பது என்றும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் இந்த சட்டத்தை படித்துப் பார்க்க வேண்டும், மத்திய அரசுக்கு பயந்து இது சாதகமானது என்று கூறுவதை ஏற்க முடியாது, அவ்வாறு கூறினால் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வேலை செய்யும் நிலை ஏற்படும், இந்த நிலை ஏற்படாமல் இருக்க தமிழக முதலமைச்சர் விவசாயிகளை காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளை தற்கொலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.