விழுப்புரம்,
விக்ரவாண்டி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அழுக்கு பாலம் என்ற இடத்தில் சாலை பணிகள் நடந்து வருவதால் ஒருவழி பாதையாக மாற்றி வாகனங்கள் இரவில் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தும், சென்னையிலிருந்து பேராவூரணி சென்ற அரசு விரைவு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், இரு பேருந்துகளின் முன்பகுதி கடும் சேதமடைந்தது.
விபத்தில், பேருந்தில் இருந்த பயணிகள் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் ஏராளமான பயணிகள் பேருந்துக்குள் சிக்கி தவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காயம்பட்டவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை கும்பகோணம் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.