தேனி அருகே வாக்குச்சாவடியை மாற்றியதால் ஊராட்சி பகுதி மக்கள் தேர்தல் புறக்கணித்து போராட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பெரியகுளம் போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேனி அருகே உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தெருவில் 1300 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு என இதுவரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதே பகுதியில் உள்ள அரசு கள்ளர் பகுதியில் வாக்களித்து வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் 1200 வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடியை இரண்டாக பிரித்துள்ளனர். இதனால் இப்பகுதி வாக்குச்சாவடியை மாற்றி அதே கிராமத்தைச் சேர்ந்த காலனி பகுதியில் உள்ள பள்ளியில் 209 மற்றும் 209 என இரு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு வாக்குச் சாவடியை மாற்றியது குறித்து முறையான அறிவிப்பு ஏதும் அளிக்கவில்லை எனக் கூறி கிராமமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் தேர்தலை புறக்கணித்து அதே பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியை மீண்டும் தங்களது பகுதிக்கு கொண்டுவரும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி அதே பகுதியில் குவிந்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் 200 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!