சென்னை,
விஜயகாந்த்துக்கு பிடிக்காத விஷயத்தையே தேமுதிக தரப்பில் இப்போது செய்துள்ளதாக ஒரு செய்தி கிளம்பி உள்ளது.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தினகரனுடன் தேமுதிக கூட்டணி வைக்க என்ன காரணம் என்பது பற்றின தகவலும் கசிந்து வருகிறது.
விஜயகாந்த்தை பொறுத்தவரை அப்படியே ஜிகே வாசன் போலத்தான். எல்லா கட்சி தலைவர்களுக்கும் பிடித்தமானவர்.. நேசிக்கப்படுபவர்.. அரசியலையும் தாண்டி தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் மீது அனைத்து தலைவர்களுமே பாசம் பொழிவார்கள். அப்படித்தான் பாஜகவும்.
எத்தனையோ விஷயங்களில் தேமுதிகவை பாஜக கைதூக்கி விட்டுள்ளது. வாரி அரவணைத்துள்ளது. கடந்த 2 தேர்தல்களிலுமே இது நன்கு புலப்படும். இந்நிலையில்தான், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று சுதீஷ், பிரேமலதாவுடன் விஜயகாந்த் 2 மாசத்துக்கு முன்னாடியே வீட்டில் ஆலோசனை செய்தாராம்.
அப்போது விஜயகாந்த் பாஜக எங்கே கூட்டணி வைக்கிறதோ..! அங்குதான் நாமும் வைக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். ஆனாலும், பாமகவை அதிமுக தூக்கி பிடிப்பதை கண்டு ஆவேசமானார் பிரேமலதா.
அந்த கட்சி மாதிரியே தங்களுக்கும் சீட் வேண்டும், வன்னியர் இடஒதுக்கீடு தரக்கூடாது என்பன போன்ற விஷயங்களை முன்வைக்கவும்தான் அதிமுக கடுப்பானதாக சொல்கிறார்கள். “அவங்களை விட்டுடுங்க” என்று ஒருகட்டத்தில் முதல்வரே தேமுதிக கூட்டணி குறித்து சொல்ல வேண்டிய நிலைமையும் வந்ததாக தெரிகிறது.
எனினும் தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை எடுபடவில்லை. பலமுறை அமைச்சர்கள் பேச்சு நடத்திய நிலையில், 13 சீட்கள் + ராஜ்ய சபா சீட் தர அதிமுக முன்வந்தது..! ஆனால், கூடுதல் சீட்டுகளுடன் தேர்தல் நிதியும் வேண்டும் என்று கேட்கவும், அத்துடன் பேச்சுவார்த்தையை அதிமுக நிறுத்தி கொண்டது.
இதற்கு பிறகு திமுகவுடன் பேச, அவர்களோ “ அதிகமாக 10 சீட்தான் முடியும், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி, தேர்தல் நிதி, ராஜ்ய சபா சீட் இதுக்கெல்லாம் ‘நோ‘ சொல்லவும் அப்படியே பின்வாங்கி ஓடியது தேமுதிக… பிறகுதான் கமலிடம் சென்றுள்ளதாக தெரிகிறது. “தேர்தல் செலவுக்கு எங்களுக்கு எவ்வளவு தர போகிறீர்கள்” என்று கமல் தரப்பில் கேட்கவும், அப்படியே அதிர்ந்துபோய்விட்டது தேமுதிக.
கேப்டனை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்ள வேண்டும் என்று தேமுதிக தரப்பில் ஒரு கண்டிஷனை போடவும், டென்ஷன் ஆகி கிளம்பி ரூமுக்குள்ளேயே போய்விட்டாராம் கமல். இறுதியில் வேறு வழியில்லாமல் டிடிவி தினகரனிடம் பேச்சை ஆரம்பித்துள்ளது. அவரோ, எடுத்த எடுப்பிலேயே, முதல்வர் வேட்பாளர் நான்தான்.
சீட் எவ்ளோ வேணுமோ வாங்க்குங்க. பணம் கிடையாது என்று கறாராக சொல்லி இருக்கிறார். தினகரனை முதல்வர் வேட்பாளராக ஏற்க தேமுதிகவுக்கு மனசே இல்லை. அதனாலேயே 3 நாள் பேச்சுவார்த்தை அப்படி அப்படியே நின்றுவிட்டுள்ளது. இந்த இடத்தில்தான் தேமுதிக தடுமாற தொடங்கி, கடைசியில் அமமுகவிடமே சரணாகி உள்ளது.
தீர்க்கமான முடிவுகளை தேமுதிக எடுக்க முடியாதது, பிற கட்சிகளை விஜய பிரபாகரன் மோசமாக பேசுவது, அளவுக்கு மீறின ஆசை போன்றவையே, எந்த பெரிய கட்சியும் தேமுதிகவை சேர்க்காததற்கு காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும், கடந்த முறையும் இதேபோன்ற நிலைமையை தேமுதிக சந்தித்ததை நினைவுகூர வேண்டி உள்ளது.
ஆனால் அப்போது நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பாஜகவுக்கு, தேமுதிகவின் தயவு முக்கியமாக தேவைப்பட்டது. இதனால் சமாளித்து கூட்டணியை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டது. ஆனால் தற்போது நடக்கவிருப்பது சட்டசபைத் தேர்தல்தானே என்று அலட்சியமாக விட்டு விட்டதாக சொல்கிறார்கள்.
இப்படித்தான் அன்று திமுக வாரி அணைக்க தயாராக இருந்தும், அதை எட்டி உதைத்து மக்கள் நல கூட்டணியில் இணைந்தது தேமுதிக.. இதற்கு பிரேமலதாவே காரணம் என்ற பேச்சு இன்றளவும் உள்ளது. அதுபோலவே, பாஜக எங்கு இருக்கிறதோ அங்குதான் கூட்டணி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விருப்பப்பட்டும், அதையும மீறி அமமுகவுடன் இன்று கூட்டணி வைத்துள்ளார் பிரேமலதா. இதனால் விஜயகாந்த் அப்செட்டில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.