தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள்… காத்திருக்க கற்றுக்கொள்ளவேண்டும்..! – ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை,

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்ணா சொன்னதை மேற்கொள் காட்டி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று ஒரே கட்டமாக வெளியிடப்பட்டது. இந்த முறை 170க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக நேரடியாகக் களமிறங்குகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியானதும் சில பகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், காத்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்ணா கூறியதை மேற்கோள்காட்டி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிடிவாதம் பிடித்தால், நெருக்கடி ஏற்படுத்தினால் அவர்கள் உடன்பிறப்பு என்ற தகுதியை இழந்துவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிடிவாதம் பிடிப்போரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளராக அறிவிக்க ஆசைதான் என்றும் ஆசைகள் கடல்போல் இருந்தாலும் தொகுதிகளின் எண்ணிக்கை கையளவுதானே என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றியைத் தடுக்க தந்திரம், சதி, சூழ்ச்சிகளைச் செய்வர். அதிகாரம் பலம் கொண்டவர்கள் திமுகவை எளிதாக வெற்றிபெற விடமாட்டார்கள்.

தேர்தலில் தந்திரங்கள், சதிகள், சூழ்ச்சிகளை முறியடிக்க திமுகவினரின் உழைப்பு, ஒத்துழைப்பு தேவை. திமுக என்ற பெட்டகத்திலுள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை, எழில் ஊட்டுபவை. அதில் 173 உடைகளை மட்டும் இந்த சட்டமன்ற தேர்தல் களத்திற்குப் பயன்படுத்தியுள்ளோம். இன்னும் ஏராளமான தரமான பயன்தரத்தக்க உடைகள் நேர்காணலில் என்னை அலங்கரித்துள்ளன.

இன்னும் பல களங்கள், வாய்ப்புகள் உள்ளதால் உரிய முறையில் அவ்வப்போது பயன்படுத்திக்கொள்வேன்என்று அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர், கருணாநிதிதான். வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். மாச்சரியங்களுக்கு இடம் கொடுக்காமல், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டிடக் களப்பணியாற்றுவோம். வரலாறு போற்றும் வெற்றியைக் கருணாநிதி நினைவிடத்தில் நாம் அனைவரும் காணிக்கையாக்குவோம்என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!