தேர்தலில் ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டி: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குவது பற்றி யோசித்து வருவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: பீகார் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேராமல் இருந்தால், ஆர்.ஜே.டி. கட்சி கூடுதல் இடங்களை வென்றிருக்கும். அதே நிலை, தமிழகத்தில் திமுகவிற்கு ஏற்படாமல் இருக்க காங்கிரசை கூட்டணியில் இருந்து திமுக விலக்க வேண்டும். அதிமுகவும், பாஜகவை கழற்றிவிட வேண்டும்.

பீகார் தேர்தல் முடிவுகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வென்றுள்ளது. பாஜகவினர் ராமரை நம்புவதைவிட வாக்குப்பதிவு எந்திரங்களைத்தான் நம்புகின்றனர். பாஜகவின் உண்மையான கூட்டணி, வாக்குப்பதிவு எந்திரங்களோடுதான்.

சட்டசபைத் தேர்தலில், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நானும் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்; நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அதுபற்றி பின்னர் முடிவெடுக்கப்படும்.

எங்கள் மூதாதை முருகனைத் திட்டமிட்டு மறைத்தார்கள். முருகனை முன்னிறுத்தி நாங்கள் கொண்டாடுகிறோம். ஆனால், பாஜகவின் வேல் யாத்திரை என்பது முழுக்க முழுக்க அரசியல் நாடகம்தான். அயோத்தியில் இராமரை வைத்து அரசியல் செய்தது போல, கேரளாவில் ஐயப்பனை வைத்து அரசியல் செய்தது போல இங்கு முருகனைக் கையிலெடுக்கிறார்கள்.

பாஜகவினர் தலைகீழாக நின்று முருகனைத் தூக்கி சுற்றினாலும், முருகனை கொண்டாடுவதால் எங்களுக்குத்தான் நன்மை வந்து சேரும். பாஜக வேல் பேரணி நடத்தி நாம் தமிழர் கட்சியைத்தான் வளர்க்கின்றனர் என்று சீமான் கூறினார்.

Translate »
error: Content is protected !!