தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி, ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை!

தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது பிறந்தநாள் விழா மற்றும் 58-வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மதுரையில் இருந்து இன்று காலை காரில் பசும்பொன்னுக்கு சென்றனர். வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர் தெப்பக்குளம் அருகே உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பசும்பொன் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

அவருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ. எஸ்.மணியன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,ஆர்.பி உதயகுமார் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மரியாதை செய்தனர்.

அதேபோல்  மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி,மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர், சதன் பிரபாகரன் ராமநாதபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்டோர், தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

அதன் பின்னர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செய்தனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, நேற்று மாலை முதல் ஆளில்லா விமானம் பறக்கவிடப்பட்டு கண்காணிப்பபு பணி தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதலாக 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

முன்னதாக, பசும்பொன் செல்வதற்காக நேற்று சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் முதல்வர் பழனிச்சாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!