நடப்பாண்டில் 7.5% இட ஒதுக்கீடு நிறைவேற்ற வேண்டும்: ஐகோர்ட்

மருத்துவப் படிப்பில் 7.5% உ ஒதுக்கீடு சட்ட மசோதாவை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஒப்புதலுக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு இது அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த 40 நாட்களுக்கு மேல் ஆகியும், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் தமிழக ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒப்புதல் அளிப்பது பற்றி முடிவெடுக்க 3-4 வாரங்கள் தேவை என்று அவர் தெரிவித்திருந்தார். ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் கலந்தாய்வு நடத்தப்போவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்தது.

இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், மசோதா தொடர்பாக ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதிலளிக்கத் தேவையில்லை என்றார்.

மசோதாவுக்கு ஒப்புதல் தர, பல கோணங்களில் ஆலோசிப்பதற்கு மேலும் அவகாசம் தேவைப்படுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும், 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர், நீதிமன்றத்திற்கு பதிலளிக்க தேவையில்லை. எனினும் மனசாட்சிப்படி இந்த விவகாரத்தில் ஆளுனர் முடிவு எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும், 7.5% இட ஒதுக்கீட்டு மசோதா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேர்ந்து உருவாக்கினர். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை பரிசீலிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்பது விசித்திரமாக உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேறாவிட்டால் நீட் தேர்வு எழுதிய 8 மாணவர்கள் மட்டுமே சேர வாய்ப்பு உள்ளது. நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும். 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் வரும் திங்களன்று நல்ல முடிவு வரும் என்று நம்புவதாக, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Translate »
error: Content is protected !!