சென்னை,
நடிகை நமீதாவை தேர்தல் பிரசாரம் செய்ய அழைக்க ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நடிகை குஷ்பு மறுத்துவருவதால் இது தொடர்பாக கமலாலயத்தில் பஞ்சாயத்து நடைபெற்று வருகிறதாம். பாரதிய ஜனதா கட்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர். இவர்களில் பலரும் சட்டசபை தேர்தலில் எப்படியும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தவமாய் தவமிருந்தனர்.
நடிகைகள் குஷ்பு, கவுதமி ஆகியோர் தொகுதிகள் எது என முடிவாகும் முன்னரே சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதிகளை ஆக்க்ரமித்து தேர்தல் பிரசாரம் செய்தனர். ஆனால் அதிமுக கூட்டணியில் சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.
இதனால் குஷ்பும் கவுதமியும் கடும் ஏமாற்றமடைந்தனர். இவர்களில் குஷ்புவுக்கு ஒருவழியாக ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து குஷ்புவும் ஆயிரம் விளக்கு தொகுதியில் படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
அத்துடன் குஷ்புவின் பிரசாரத்தை மையமாக வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகளும் ரெக்கை கட்டி பறக்கின்றன. அண்மையில் குஷ்புவின் கணவர் இயக்குநர் சுந்தர் சி. தொகுதிக்கு சென்று அவருக்கான பிரசார ஏற்பாடுகளில் அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார். இதனால் பாஜகவினர் அவர் மீது கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகை நமீதாவும் பாஜக தலைவர் எல். முருகனிடம் ஒரு புகார் வாசித்திருக்கிறார். அதாவது ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரசாரம் செய்ய விரும்பினேன்; இதற்காக பலமுறை நடிகை குஷ்புவை தொடர்பு கொண்டேன். அவர் சரியாக பதில் சொல்லவில்லை. ஒருகட்டத்தில் என் போனையே எடுப்பதும் இல்லை. இதற்கு ஒரு தீர்வு சொல்லனும் என புலம்பியிருக்கிறார்.
ஆனால் நடிகை குஷ்பு தரப்போ, நானே சீனியர் நடிகை. நமீதா வந்துதானா எனக்கு பிரசாரம் செய்யனுமா? அப்படி எல்லாம் எனக்கு தேவை இல்லை. நான் என் தொகுதியை பார்த்து கொள்கிறேன் என பதில் சொல்லியிருக்கிறதாம். இதுதான் இப்போது சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்து வரும் பஞ்சாயத்தாம்.