இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணியவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது கூறியதாவது:
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் 50 சதவீத மக்கள் இன்னும் முகக்கவசம் அணியவில்லை என்றும், முகக்கவசம் அணிந்தவர்களில் 64 சதவீதம் சரியான முறையில் அணியவில்லை என்றும் கூறியுள்ளார். ஒரு நபர் உடல் ரீதியான விலகலைப் பின்பற்றவில்லை என்றால், அந்த நபரால் ஒரே மாதத்தில் 406 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அகர்வால் நடத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளி மிகவும் முக்கியமானது. இதேபோன்று முகக்கவச பயன்பாடும் மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட நபரும் நோய்த்தொற்று இல்லாத நபரும் முகக்கவசம் அணியவில்லை என்றால், தொற்று பரவல் 90 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.