நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்வதாக மீனவர்களிடம் உறுதி அளித்த அமைச்சர் ஜெயக்குமார்

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 170 மீனவர் குடும்பத்தை சேர்ந்த 500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள சூளேரிக்காட்டு குப்பத்தில் கடற்கரை ஓரம் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு கடல் நீர் கொண்டு வர ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக அங்குள்ள கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு பெரிய, பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டன. அங்கு கடல் அலையின் வேகத்தை குறைக்க கொட்டப்பட்ட கற்களால் பக்கத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்தது.

அங்கு (நெம்மேலி குப்பம்) கடல் அலையின் வேகம் அதிகரித்து 50 மீட்டர் தூரத்திற்கு கடல் முன்னோக்கி கரைப்பகுதியை நோக்கி வந்துவிட்டதால் அங்குள்ள மணல் பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுவிட்டது. 50 மீட்டர் கரைப்பகுதி கடல் நீரால் ஆக்கிரமிக்கப்பட்டு ராட்சத அலை முன்னோக்கி சீறிப்பாய்ந்து வந்து தாக்கியதால் சில நாட்களுக்கு முன்பு 100 மீட்டர் நீளமுள்ள சிமெண்ட் சாலை பலத்த சேதமடைந்தன.

நெம்மேலி குப்பத்தின் வடக்கு பக்கத்தில் உள்ள கரைப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு 20 மீட்டர் தூரத்திற்கு மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அங்குள்ள கடற்கரை ஓரம் உள்ள அம்மன் கோயிலும் இன்னும் சில மாதங்களில் கடல் அரிப்பினால் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நெம்மேலி குப்பம் மீனவர்கள் தங்கள் பகுதியில் மேலும் கடல் அரிப்பு ஏற்படாத வண்ணம் தூண்டில் வளைவு அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று நெம்மேலி குப்பத்திற்கு வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் கடல் அரிப்பால் படகு, மீன்பிடி வலைகளை வைக்க இடம் இல்லாமல் தொடர்ந்து தாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் உடனடியாக தங்கள் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் தூண்டில் வளைவு அமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்த பிறகு உடனடியாக இக்கோரிக்கை நிறைவேற்றும் விதமாக இப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ஆவன செய்வதாக மீனவர்களிடம் உறுதி அளித்தார்.

அப்போது அமைச்சர் பாண்டியராஜன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மாவட்டக் கழக அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான .தனபால், மகளிர் அணி நிர்வாகி காயத்ரிதனபால், முன்னாள் எம்எல்..பா.வாசுதேவன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் வி.பக்தவச்சலம் உள்பட பலர் உடனிருந்தனர்.

 

Translate »
error: Content is protected !!