பஞ்சாப் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் நொறுங்கி விழுந்ததில் விமானி உயிரிழந்தார்.
இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கை:
வழக்கமான பயிற்சிக்காக கிளம்பி சென்ற மிக் 21 ரக போர் விமானம், நேற்றிரவு 9.30 மணிக்கு மோகா மாவட்டத்தில் லங்கேயனா என்னும் கிராமத்தில் நொறுங்கி விழுந்தது. இதில் இருந்த விமானி அபிநவ் சவுத்ரி, படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு, இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்து கொள்கிறது என தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில், மிக் 21 ரக போர் விமானம் விபத்திற்குள்ளாவது இது 3வது முறையாகும். கடந்த மார்ச் மாதம், பயிற்சியின் போது நடந்த விபத்தில் விமானி ஏ.குப்தா உயிரிழந்தார். அதேபோல் ஜனவரி மாதம், மிக் ரக போர் விமானம், ராஜஸ்தானில் பொறுங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. பயிற்சியின் போது, இந்தவிமானங்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக விமானப்படை தெரிவித்து உள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிராமத்தில் ஓர் வயல்வெளியில் விமானம் நொறுங்கி விழுந்திருந்தது. மழை தூறிக் கொண்டிருந்த நிலையிலும் விடியற்காலை 3 மணிக்கு விமானியின் உடலைக் கண்டெடுத்தோம் விமானி உயிரிழந்திருந்ததை எங்களுடன் வந்திருந்த மருத்துவ நிபுணக்குழு உறுதி செய்தது என்று மோகா போலீஸ் எஸ்பி குந்தீப் சிங் தெரிவித்தார்.