பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூர் பாஜக தலைவரின் வீட்டு முன் மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷிர்புர் நகரில் பாஜக தலைவரும் முன்னாள் மந்திரியுமான டிக்ஷான் சூட் இல்லம் அமைந்துள்ளது. இவரது வீட்டு முன் நேற்று போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கம் இட்டு சிலர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் என்று சொல்லப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து ஒரு டிராக்டரில் மாட்டுச்சாணம் கொண்டு வந்து, பாஜக தலைவரின் வீட்டு முன் கொட்டினர். தொடர்ந்து பாஜக தொண்டர்கள்.
அங்கு வரவே, போலீசார் இரு தரப்பினரையும் குறிப்பிட்ட இடத்திலிருந்து அகற்றினர். இதையடுத்து, மாட்டுச்சாணம் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக தலைவர் டிக்ஷான் சூட் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங், தனிநபர் உரிமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான போராட்டம் அமைதியான போராட்டத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுப்பதோடு போராட்டத்தின் நோக்கங்களையும் சிதறடிக்கும்” எனத்தெரிவித்துள்ளார். மேலும், அரசியலில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவதும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அமைதியை சீர்குலைப்பதோடு, பல்வேறு மத சாதியினர் இடையே நிலவும் நல்லிணக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.