தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. தொடர்மழையால் ஏரிகள் நிரம்பினால் உபரிநீரை வெளியேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.