பாஜகவில் இணைப்போகிறேனா? வதந்திக்கு மு.க. அழகிரி முற்றுப்புள்ளி!

பாரதிய ஜனதா கட்சியில் நான் இணையப்போவதகா வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று, மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் இருந்தவருமான மு.க.அழகிரி, 2014ஆம் ஆண்டு, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கருணாநிதியின் மறைவுக்கு பிறகும் அமைதியாக இருந்த அழகிரியின் அரசியல் பிரவேசம் குறித்து அண்மையில் செய்திகள் வரத் தொடங்கின. தீபாவளி நேரத்தில் தனது ஆதரவாளர்களுக்கு போனில் அழகிரி வாழ்த்து சொன்னார்.

இதற்கிடையே, அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் அழகிரி இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின; இந்த யூகங்களுக்கு மத்தியில், அரசியல் நிலைப்பாடு தொடர்பாக கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்ட அழகிரி, பின்னர் அந்த கூட்டத்தை நடத்தவில்லை.

அழகிரியின் அரசியல் வருகை குறித்த முரண்பட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், மதுரையில் இன்று (டிசம்பர் 1) செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, மீண்டும் திமுகவில் இணையப்போவதாக வரும் தகவல்கள் தவறு. வதந்திகள் இங்கு நிறைய உலா வருவதாக கூறினார்.

அதேபோல், நான் கூட அமித் ஷாவை சென்று சந்திப்பதாக பேச்சு அடிபட்டது. அப்படி நடந்ததா? வதந்திகளை மட்டும்தான் என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்களே என்று, அழகிரி எதிர்கேள்வி எழுப்பினார்.

பாரதிய ஜனதாவில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்துமே வதந்தி. புதிய கட்சி துவங்குவது குறித்து போகப்போகத்தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று அழகிரி தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!