பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

புதுதில்லி

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் பாலஸ்தீனர்கள் பலரின் உயிரைப்பறித்திருக்கிறது.

யூதர் குடியிருப்புகளை முழுமையாகக் கொண்டுவருவதற்காக ஷேக் ஜரா பகுதிகளில் வசிப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றம் செய்யும் முயற்சிகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல்கள் தொடுப்பதன் மூலம் கிழக்கு ஜெருசலத்தை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துவிடலாம் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் காயை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

முஸ்லீம்களின் மூன்றாவது புனித மசூதியாகக் கருதப்படும் அல்அக்சா மசூதி வளாகத்தின் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர். அதன்மூலம் ரமலான் மாதத்தில் மசூதியில் தொழுகை செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் காயங்கள் அடைந்திருக்கின்றனர்.

இஸ்ரேல் தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்றிடத் தொடர்ந்து தோல்வியுற்று வரும் நேடான்யாஹூ, தன்னுடைய அற்ப அரசியல் ஆதாயங்களுக்காக இத்தகைய தாக்குதல்களை ஏவியிருக்கிறார். அதன்மூலமாக கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாத்திடுவதில் படுதோல்வியுற்றதை மறைத்திடலாம் எனக் கருதுகிறார்.

இஸ்ரேலில் வாழ்ந்துகொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கு, கொரோனா தடுப்பூசிகள் போட மறுத்திருப்பதன் மூலம் தன் இன ஒடுக்கல் கொள்கையையும் வெறித்தனத்துடன் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மனித உரிமைகளையும், .நா.மன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு தீர்மானங்களையும் முற்றிலும் மீறிய நடவடிக்கைகளாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்நடவடிக்கைகளைக் கண்டிப்பதுடன், இந்திய அரசாங்கம் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

Translate »
error: Content is protected !!