கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டிக்கும் கோரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கோரோனோ பாதிக்கப்பட்ட இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முக்கிய உடல்நல சிக்கல்கள் இல்லை என்றாலும் ஏழு பேர் கொண்ட மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகின்றது.
இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி மாநில தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், செய்தித்தாள்களைப் படிப்பதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் தேதி பினராயி விஜயன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால் உம்மன் சாண்டி இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தற்போது முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.