புதுவை,
பிரதமர் மோடி வருகையால் புதுவையில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. வான்வெளியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மாலை 4.30 மணியளவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டி பேசுகிறார் பிரதமர் மோடி.
புதுவையில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாக மோதுகின்றன. என்.ஆர்.காங்கிரஸ்–பாஜக–அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது.
இதனால் புதுவையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வாக்குகளை சேகரிக்க அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று மாலை புதுச்சேரிக்கு வருகை தருகிறார்.
ரோடியர் மில் திடலில் மாலை 4.30 மணியளவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகளை திரட்டி பேசுகிறார். மோடி மாலை 4.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புதுவைக்கு வருகிறார். அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடக்கும் ஏ.எப்.டி. திடலுக்கு வருகிறார். சுமார் ஒரு மணி நேரம் பிரச்சாரக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுவையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி புதுவையில் இன்று ஒருநாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வான்வெளியில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. புதுவை நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார், துணை ராணுவப் படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுவை முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது…..